shadow

அமெரிக்காவில் ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பர் மரணம்.
putin
ரஷ்ய அதிபரின் நெருங்கிய நண்பரும், ரஷ்ய  அரசின் ஊடகத்துறையின் தலைவருமான மிகையீல் லெஸின் என்பவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறையின் அமைச்சராக பொறுப்பு வகித்த மிகையீல், தனது காலத்தில் ரஷ்ய  அரசுக்கு சொந்தமான பிரபல ‘ரஷ்யா டுடே’ செய்தி சேனல் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

இவரது பதவி காலத்தில் ரஷ்ய ஊடகங்களுக்கு பெரும் கட்டுப்பாடுகள் இருந்தது. மேலும் இவர் தனது பதவிகாலத்தில் பலகோடி டாலர்கள் ஊழல் செய்ததாகவும், அந்த பணத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிகையீல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து அமெரிக்க போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, வாஷிங்டனில் உள்ள ரஷ்ய  தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கு உறவு சரியில்லாத நிலையில் ரஷ்ய அதிபரின் நெருங்கிய நண்பர் ஒருவர் அமெரிக்காவில் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply