இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான செல்போன் எல்லோருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. ஆனால் அதே செல்பொனை தவறான வழியில் உபயோகப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை படு சொதப்பலாக சொல்லும் கதைதான் புலிவால். திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல படமாக வந்திருக்கும். இயக்குனர் மிஸ் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் தம்பி ராமைய்யா சேல்ஸ் மேனேஜராகவும், விமல் மற்றும் அனன்யா விற்பனையாளராகவும் பணிபுரிகின்றனர். இவர்கள் இருவருக்கிடையே காதல் அரும்புகிறது.  தம்பி ராமைய்யா இவர்களுடைய காதலுக்கு பச்சைக்கொடி காண்பிக்கிறார்.

இன்னொரு முனையில் பிரபல தொழிலதிபராக இருக்கும் பிரசன்னா, தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஓவியாவின் அழகில் மயங்கி, அவரை அடைய துடிக்கிறார். பிரசன்னாவின் நயவஞ்சகம் தெரியாமல் ஓவியா, உண்மையாகவே பிரசன்னாவை காதலிக்கிறார். ஓவியாவை நைசாக பேசி, தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்து சென்று ஓவியாவுடன் நெருக்கமாக இருக்கிறார். அதை ஓவியாவுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோவும் எடுத்து வைக்கிறார்.

இந்நிலையில் பிரசன்னாவுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்கின்றனர். மணமகள் இனியா. இனியாவுடன் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும்போது, டிரைவர் மூலம் பிரசன்னாவுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்து பிரசன்னாவை மிரட்டுகிறார் ஓவியா. ஒரு ரெஸ்டாரெண்டில் இருவரும் இதுகுறித்து பேசும்போது, பிரசன்னா, ஓவியாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காண்பித்து மிரட்டுகிறார். காதலை வெளியே சொன்னால் இந்த வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால் இனியா கோபத்துடன் போய்விடுகிறார். அப்போது பிரசன்னா அந்த செல்போனை ரெஸ்டாரெண்டிலேயே தவறவிட்டு போய்விடுகிறார்

அந்நேரம் ரெஸ்டாரெண்டுக்கு வரும் விமல் கையில் சிக்குகிறது அந்த செல்போன். விமல் நண்பன் அந்த வீடியோவை விமலுக்கு தெரியாமல் யூடியூபில் அப்லோடு செய்துவிடுகிறார். இதனால் ஓவியா தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். பிரசன்னாவின் திருமணமும் தடைபடுகிறது., பின்னர் பிரசன்னா -ஓவியா சேர்ந்தார்களா? விமல் – அனன்யா திருமணம் என்ன ஆச்சு? என்பதை தெளிவில்லாத திரைக்கதையுடன் முடித்திருக்கிறார்கள்

இன்னும் எத்தனை படங்களில்தான் விமல் இந்த அப்பாவித்தனமான முகத்தோடு நடிப்பார் என தெரியவில்லை. பார்க்கவே சகிக்கவில்லை. இனியா, ஓவியா, அனன்யா இருந்தும் ஒருவருக்கும் நடிக்க வாய்ப்பில்லை. ஓவியா கவர்ச்சிக்கு மட்டுமே உதவுகிறார்.

20 நிமிடங்களில் சுருக்கமாக குறும்படம் மூலம்  சொல்லக்கூடிய ஒரு நல்ல திரைக்கதையை தேவையில்லாத காட்சிகளால் போரடித்திருக்கிறார் இயக்குனர் . பாடல்களும் ரொம்ப சுமார். மொத்ததில் இது புலிவால் அல்ல.. எலிவால்.

Leave a Reply