புலி. திரைவிமர்சனம்

review

துப்பாக்கி, கத்தி போன்ற மாஸ் திரைக்கதையில் பார்த்து பழக்கப்பட்ட விஜய்யை ஒரு ஃபேண்டஸி கதைக்குள் நுழைத்து வெற்றி பெறவைப்பது என்பது ரொம்ப சிரமமான விஷயம். அதுவும் நான்கு சுமாரான படங்களை எடுத்த சிம்புதேவனால் இது முடியுமா? என்பதே பலரது கேள்வியாக இருந்தது இந்த கேள்விக்கு விஜய்+சிம்புதேவன் கூட்டணி என்ன பதில் கூறியிருக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

வேதாள உலகம் என்ற கோட்டையில் இருந்து கொண்டு 56 கிராமங்களை ஆட்சி செய்யும் ஸ்ரீதேவியை, அந்த நாட்டின் படைத்தளபதி சுதீப்  செய்வினை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். தளபதியின் அக்கிரமங்களை ராணியிடம் முறையிட சென்ற 56 கிராமங்களில் ஒரு கிராமத்தின் தலைவரான பிரபுவின் கை வெட்டப்படுகிறது. இந்நிலையில் ஆற்றில் மிதந்து வரும் ஒரு குழந்தையை பிரபு தத்தெடுத்து தனது குழந்தைகளில் ஒருவராக வளர்த்து வருகிறார்.

சிறுவயதில் இருந்தே வீரனாக வளரும் அந்த குழந்தைதான் விஜய் என்பதை சொல்ல தேவையில்லை. சிறுவயது ஸ்ருதியை காதலித்து பின்னர் பெரிய பெண்ணாக மாறியதும் ‘ஏண்டி ஏண்டி’ என டூயட் பாடி, திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால் வேதாளங்களினால் ஸ்ருதிஹாசன் திருமண தினத்தன்றே கடத்தப்பட, தனது காதல் மனைவியை மீட்க தம்பி ராமையா-சத்யன் என்ற இரண்டு காமெடியன்களுடன் கிளம்புகிறார். இந்த இடத்தில் இருந்து படத்தின் கதை சீரியஸாக ஆரம்பிப்பதற்கு பதிலாக காமெடி தொடங்குகிறது. பின்னர் ஸ்ரீதேவியை சந்தித்து சுதீப்புடன் மோதி ஸ்ருதியை எப்படி மீட்டு எடுக்கின்றார் விஜய் என்பதுதான் மீதிக்கதை.

விஜய் இதுவரை 57 படங்களில் நடித்து விட்டார். ஆனால் அவரை இந்த அளவுக்கு கேவலமான ஒரு அறிமுகத்தை எந்த இயக்குனரும் கொடுத்திருக்க மாட்டார். அந்த பெருமையை சிம்புதேவன் தட்டி செல்கிறார். முதல்காட்சியிலேயே ‘வேதாளத்தின் காலில் விழும் விஜய், நீங்க வேதாளம், நான் பாதாளம் என்று கூறுவது அஜீத் ரசிகர்களுக்கு கிடைத்த அல்வா. ஒரு மாஸ் ஹீரோவை சாதாரண படைத்தலைவனின் காலில் விழவைத்து அறிமுகப்படுத்திய இயக்குனர் சிம்புதேவன், அதன்பின்னர் அவரை முழுநேர காமெடியனாகவே இறுதிவரை காட்டியுள்ளார்.

துப்பாக்கி, கத்தி போன்ற ஆக்ரோஷமான ஹீரோவை பார்த்து பழக்கமான விஜய்யின் ரசிகர்களே நெளியும்படி அவரது கேரக்டர் அமைக்கபட்டுள்ளது. வழக்கம்போல பாட்டு, டான்ஸ் மற்றும் காமெடி என விஜய் தன் பங்குக்கு கலக்கலான நடிப்பை கொடுத்தாலும், வீக்கான திரைக்கதையால் அனைத்துமே வேஸ்ட் ஆகிவிட்டது.

ஸ்ருதிஹாசன் ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் நிச்சயம் தோல்விதான் என்பது ஏற்கனவே 3, ஏழாம் அறிவு, பூஜை ஆகிய படங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது இந்த படத்திலும் தொடர்கிறது. ஸ்ருதிஹாசன் தனது உடம்பை வெளிப்படுத்த செய்த முயற்சிகளில் ஒரு சதவீதம் கூட நடிப்பை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்கான வாய்ப்பும் சிம்புதேவன் கொடுக்கவில்லை என்பதும் ஒரு உண்மை.

ஹன்சிகா இந்த படத்திற்கு தேவையில்லாத ஒரு கேரக்டர். இளவரசிக்கான எந்த மிடுக்கும் அவரிடம் இல்லை. அவரையும் கவர்ச்சிக்கும் பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்திய சிம்புதேவனுக்கு வாழ்த்துக்கள்

இந்த படத்தை பாகுபலி’யுடன் ஒப்பிட வேண்டாம் என சிம்புதேவன் தனது பேட்டியில் கூறியது நூறு சதவீதம் உண்மைதான். பாகுபலியின் கால்தூசிக்கு கூட இந்த படம் லாயிக்கில்லை என்பது படம் பார்த்த பின்னர் புரிகிறது. விஜய் போன்ற ஒரு பெரிய மாஸ் நடிகரை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டு படங்களில் கோடிட்டு காட்டியும் ஏன் இந்த டெக்னிக் மற்ற இயக்குனர்களுக்கு புரியவில்லை என்று தெரியவில்லை. 23ஆம் புலிகேசி படத்தில் நடித்த வடிவேலுக்கு கொடுக்க வேண்டிய கேரக்டரை விஜய்யிடம் கொடுத்து விஜய்யின் ஒருவருட கால்ஷீட்டையும், ரூ.100 கோடி பட்ஜெட்டை வீணாக்கியும் உள்ளார் சிம்புதேவன். இந்த படத்தில் ஒரு காட்சியில் கூட வித்தியாசமான, ஆச்சரியபட வைக்கும், கண் கலங்க வைக்கும், காட்சி இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை. வெறும் கிராபிக்ஸ், டெக்னிக்கல், தரமான ஒளிப்பதிவை வைத்து கொண்டு ஒரு படத்தை வெற்றிப்படமாக்க முடியாது என்பதும் அழுத்தமான திரைக்கதை இருந்தால் மட்டுமே ஒரு படத்தை வெற்றிப்படமாக்க முடியும் என்பதை சிம்புதேவனுக்கு யாராவது புரியவைத்தால் நல்லது.

பிரமாண்டமான கலை இயக்குனர் முத்துராஜ், அபாரமான ஒளிப்பதிவாளர் நட்டி, ராக்ஸ்டார் என்று பெயர் வாங்கிய தேவிஸ்ரீ பிரசாத், உலக தரத்தில் அமைந்த கிராபிக்ஸ் காட்சிகளின் வடிவமைபாளர் கமலக்கண்ணன் ஆகியோர்களை சரியாக தேர்வு செய்தது மட்டுமின்றி, அவர்களிடம் அபாரமாக வேலை வாங்கிய சிம்புதேவன், தன்னுடைய வேலையை சரியாக செய்யாததால், இந்த படத்தை விஜய் ரசிகர்களால்கூட ரசிக்க முடியவில்லை என்பதுதான் சோகம். இது ஒரு குழந்தைகளுக்கான படம் என்று அடிக்கடி பேட்டிகளில் கூறிய சிம்புதேவன், அதற்காக அம்புலிமாமா டைப்பில் ஒரு படத்தை எடுத்தால் எந்த குழந்தை ரசிக்கும்?

மொத்தத்தில் விஜய் என்ற புலியை பலியாக்கிவிட்டார் சிம்புதேவன்

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *