shadow

train 1இந்தியாவில் இதுவரை தனியார் வசம் போகாமல் இருக்கும் ஒரே போக்குவரத்து துறை ரயில்வே துறைதான். பஸ், விமானம், கப்பல் என அனைத்திலும் தனியார் இருக்கும் நிலையில் ரயில்வே துறை மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால் தற்போது இதுவும் கூடியவிரைவில் தனியார் கைக்கு போய்விடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரயில்வே துறையை சீரமைப்பது குறித்து பரிந்துரை செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட வல்லுனர் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு கடந்த ஒன்பது மாதங்களாக ரயில்வே துறையை ஆராய்ந்து தற்போது  300 பக்க இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவதாவது:

சாலை, சிவில் விமான போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற பிற துறைகளுடன் ஒப்பிடுகையில், ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. ரயில்களை இயக்குவது, கொள்கை முடிவு எடுப்பது, ஒழுங்குபடுத்துவது என எல்லா வேலைகளையும் ஒரே அமைப்பு மேற்கொள்வதுதான் இந்த நிலைமைக்கான காரணங்களில் ஒன்றாகும். ரயில்வே துறையின் பங்குகளை விற்பனை செய்து, ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குங்கள் என்று நாங்கள் பரிந்துரை செய்யவில்லை. ரயில்கள் இயக்கத்தில் தனியாரையும் அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தனியாருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இதற்காக, இந்திய ரயில்வே ஒழுங்குமுறை ஆணையம் என்ற சட்டப்பூர்வ, சுயேச்சையான அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு தனி பட்ஜெட் போட வேண்டும். சரக்கு கட்டணங்களை நிர்ணயித்தல், சர்ச்சைகளுக்கு தீர்வு காணுதல், தொழில்நுட்ப தரத்தை நிர்ணயித்தல் போன்ற பணிகளை அந்த அமைப்பு செய்ய வேண்டும். ரயில்களை இயக்குவதுதான் இந்திய ரயில்வேயின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். அதனால், பள்ளி மற்றும் மருத்துவமனைகள் நடத்துவதை கைவிட வேண்டும். ரயில்வே ஊழியர்களின் குழந்தைகளை மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி சேர்த்தால், அவர்களுக்கு மானியம் அளிக்கலாம். அதுபோல், ரயில்வே தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கும் மானியம் தரலாம்.

ரயில்வே பாதுகாப்பு படையையும், ரயில்வேயின் பிரதான பணிகளில் தொடர்புபடுத்தக் கூடாது. முடிவு எடுக்கும் அதிகாரத்தை ரயில்வே வாரியம் தன்னிடமே குவித்துக்கொள்ளக்கூடாது. கோட்ட மற்றும் மண்டல மேலாளர்களுக்கும் அந்த அதிகாரத்தை அளிக்க வேண்டும். அதன்மூலம், அவர்கள் விரைவாக முடிவு எடுக்க முடியும். மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே போலீசின் ஒட்டுமொத்த செலவையும் அந்தந்த மாநில அரசே ஏற்குமாறு கூற வேண்டும். நாங்கள் பரிந்துரை செய்த செயல் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தினால், ரயில்வேக்கு என தனி பட்ஜெட் தேவைப்படாது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை ரயில்வே அமைச்சகம் ஆய்வு செய்து விட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும். அதன்பிறகு மத்திய அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும்.

Leave a Reply