ராம்தாஸ் கேட்ட கேள்வியை அதிமுக கேட்குமா?

அடுத்த ஒரு மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று பாரதிய ஜனதா தலைமை அறிவித்தால், அதை ஏற்று, அக்கட்சியின் வேட்பாளருக்கு பா.ம.க ஆதரவளிக்கும்; இல்லையேல் குடியரசுத் தலைவர் தேர்தலை பா.ம.க புறக்கணிக்கும்” என்று பாமக தலைவர் டாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளார். இவரை போலவே அதிமுகவின் மூன்று அணிகளும் பாஜகவுக்கு நிபந்தனை விதித்திருந்தால் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை தீர்ந்திருக்கும், ஆனால் லாப அரசியல் செய்பவர்கள் இதை செய்யவில்லையே!

இதுகுறித்து பாமக ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை 17-ம் தேதி டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தங்கள் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவளிக்கும்படி பா.ஜ.க தலைவர்கள் கோரினர். இதுகுறித்து பா.ம.க உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் விவாதித்து, தமிழகத்துக்கு நன்மை அளிக்கும் முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், அதன் இறுதித் தீர்ப்பை வழங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனாலும், அந்தத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவில்லை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏழரை ஆண்டுகளும், இப்போதைய ஆட்சியில் மூன்று ஆண்டுகளும் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்த இரு கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடியை மூன்று முறையும், நீர்வள அமைச்சர் உமா பாரதியை இரு முறையும் மக்களவை உறுப்பினர் அன்புமணி சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த நான்கு நாள்களில் அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையைச் செயல்படுத்த ஒப்புக்கொண்ட மத்திய அரசு, கர்நாடகத்தின் அழுத்தத்துக்குப் பணிந்து, அடுத்த மூன்று நாள்களில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்த விஷயத்தில், மத்திய அரசுக்கு ஆணையிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்துவிட்டனர். அதுமட்டுமன்றி, நடுவர் மன்றத் தீர்ப்பையே செல்லாததாக்க நிரந்தரமான ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தமிழகத்தை ஆளும் பினாமி அரசு, வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், பணம் கொட்டும் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் வசதியாக, மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கிறது. இந்த அரசு தமிழகத்தின் உரிமைகளை மீட்கும் என்ற நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு வங்கியில், அ.தி.மு.க-வின் 59,224 வாக்குகள் (5.36%) , தி.மு.க-வின் 18,352 வாக்குகள் (1.66%) உட்பட மொத்தம் 8% வாக்குகள் தமிழகத்திடம் உள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில், தமிழக வாக்குகளுக்கு பங்கு உண்டு. அனைத்துக் தமிழகக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தங்களின் வாக்குகள் தேவை என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை நிபந்தனையாக விதித்திருக்கலாம். ஆனால், அதை யாரும் செய்யவில்லை.

இன்றைய நிலையில் உழவர்களின் துயரம்தான் தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்னையாக மாறிவருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டும் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில், மொத்தமுள்ள 10 பருவங்களில் மூன்று சம்பா பருவங்களில் மட்டும்தான் ஓரளவு சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் துயரத்துக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாததுதான். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும், அதை செயல்படுத்தி காவிரிப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தவறிவிட்டது. இத்தகைய சூழலில், அடுத்த ஒரு மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று பாரதிய ஜனதா தலைமை அறிவித்தால், அதை ஏற்று, அக்கட்சியின் வேட்பாளருக்கு பா.ம.க ஆதரவளிக்கும்; இல்லையேல் குடியரசுத் தலைவர் தேர்தலை பா.ம.க புறக்கணிக்கும்” என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *