shadow

trissur-pooram-large_1

திருவனந்தபுரம்: கேரளாவில், கோவில் திருவிழாக்களில், அலங்கரிக்கப்பட்ட யானைகள் பங்கேற்பது, 200 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், சமீப நாட்களாக, யானைகள் பங்கேற்க, விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சூரில் இன்று நடைபெறும் பூரம் திருவிழாவில், வழக்கம் போல, அலங்கரிக்கப்பட்ட யானைகளை பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெடா என்ற, விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது: கோவில் திருவிழாக்களில், யானைகளை பங்கேற்கச் செய்வதன் மூலம், அவை துன்புறுத்தப்படுகின்றன. நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்படுகின்றன. எனவே, இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி பெறாமல், திருச்சூர் பூரம் திருவிழா உட்பட, பல திருவிழாக்களிலும், யானைகள் அணிவகுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று பரிசீலித்த நீதிபதிகள் ஷபிக்கியூ மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, மனு மீதான விசாரணை, ஐகோர்ட்டின் கோடை விடுமுறைக்குப் பின், மே, 20ம் தேதி நடைபெறும் என, தெரிவித்தது. அத்துடன், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க மறுத்து விட்டது. அதேநேரத்தில், கேரள மாநில அரசும் இந்த விவகாரத்தில், தலையிட முடியாது என, தெரிவித்து விட்டது.
thrisoor-Pooram-NISHAM-ABDULMANAF1
திருச்சூர் பூரம் திருவிழாவானது, யானைகள் அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி நடைபெறும். பாரம்பரிய முறைப்படி நடைபெறும் திருவிழாவில், மாநில அரசு தலையிட விரும்பவில்லை. இருப்பினும், திருவிழாவின் போது, யானைகள் துன்புறுத்தப்பட்டதாக அரசுக்கு தகவல் வந்தால், அது கவனிக்கப்படும், என, கேரள வனத்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனால், பாரம்பரிய முறைப்படி, அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் திருவிழா, இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Leave a Reply