shadow

poojaiஇயக்குநர் ஹரியின் படங்கள் என்றால் என்ன இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அனல் பறக்கும் ஸ்டண்ட் காட்சிகள், சூடான வசனங்கள், பயமுறுத்தும் வில்லத்தனம், மிகைப்படுத்தப்பட்ட ஹீரோயிஸம், இடையிடையே கொஞ்சம் காதல், கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட் ஆகிய அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கின்றது.  இருக்கின்றன. கூடவே ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதையாக மிஸ் ஆகவில்லை.

 கோவையில் உள்ள காய்கறிச் சந்தையில் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும் ஹீரோ வாசுதேவன் (விஷால்) அதே ஊரில் ஃபைனான்ஸ் கம்பெனி என்னும் போர்வையில் இருக்கும் கொலைகாரன் அன்னதாண்டவத்தின் (முகேஷ் திவாரி) வழியில் எதிர்பாராத வகையில் குறுக்கிடும்படி அமைகிறது.  கோவை டி.எஸ்.பி.யை கொல்லும் திட்டத்தையும் தற்செயலாக முறியடிக்கும் வாசுவை, தாண்டவம் பழிவாங்க முடிவு செய்கிறான்.

ஒரு பெண்ணை அவமானத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத் பழியை தன்மீது சுமந்தபடி குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் வாசுவிற்கு, மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கான சந்தர்ப்பத்தையும் தாண்டவனின் செயல்கள் தற்செயலாக ஏற்படுத்தி கொடுக்கின்றன. பொள்ளாச்சி கோவிலில் நடக்கும் திருவிழாவின்போது தன் வேலையைக் காட்டத் தாண்டவன் திட்டமிருகிறான். பண பலம், ஆள் பலம் அரசியல் செல்வாக்கு ஆகியவை கொண்ட தாண்டவனை ஒற்றை ஆளாக இருந்து எப்படி வாசு முறியடிக்கிறான் என்பதே விறுவிறுப்பான கதை. சந்தையில் வாசுவைச் சந்திக்கும் திவ்யாவுக்கு (ஸ்ருதி ஹாசன்) வாசுவுக்கும் இடையில் ஏற்படும் காதல் இதில் கிளைக் கதை.

 மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வாசு குடும்பத்தை விட்டுப் பிரிந்தால் வட்டித் தொழில்தான் செய்ய வேண்டுமா? அநியாய வட்டி வாங்குவது, நாலு பேரை அடித்து உதைத்து பண வசூல் செய்வது என்றிருக்கும் இளைஞன் மீது ஒரு பெண்ணுக்குக் காதல் வருகிறது. இப்படியெல்லாம் கடுப்படிக்கும் பட்த்தில் குடும்பப் பிரச்சினை நுழைந்தவுடன் ஆசுவாசம் அளிக்கிறது. விறுவிறு மசாலா படத்துக்கான ஃபார்முலாவை வைத்துக்கொண்டு படமெடுக்கும் ஹரியிடம் லாஜிக் கேள்விகளைக் கேட்பதில் அர்த்தமில்லை. விஷால் குடும்பத்துக்கும் தாண்டவத்திற்கும் இடையில் உள்ல பிரச்சினை, தாண்டவத்துக்கும் வாசுவுக்கும் இடையில் முளைக்கும் பிரச்சினை, காதல் கதை, பிஹாரிலிருந்து துப்பாகியுடன் சென்னைக்கு வரும் இளைஞன், கூலிக்குக் கொலை செய்யும் நெட்வொர்க் என்று பல்வேறு இழைகளை சுவாரஸ்யமாகக் கோர்த்துப் படமாக்கியிருக்கிறார் ஹரி. பழகிப்போன காட்சிகள், சவடால்கள் என்றாலும் விறுவிறுப்புக்கு உத்தரவாதம் உண்டு.

 காதல், காமெடி, பாசம், ஆக்ரோஷம் ஆகியவற்றின் கலவையாக விஷாலின் பாத்திரம். குறை வைக்காமல் செய்திருக்கிறார். அத்தனை பேர் முன்னால் அவமானப்படும் காட்சியில் நன்றாகச் செய்திருக்கிறார். கடந்த சில படங்களில் அமைதியான ஆக்‌ஷன் வேட்த்தில் வந்த விஷாலுக்கு மீண்டும் அதிரடி ஆக்‌ஷன் வேடம். சண்டைக் காட்சிகளிலும் ஆக்ரோஷம் காட்டும் இடங்களிலும் பின்னிஎடுக்கிறார்.

 ஸ்ருதிக்கு நடிக்கப் பெரிய வாய்ப்பு இல்லை. அழகுப் பதுமையாகப் படம் முழுவதும் வந்துபோகிறார். பாடல் காட்சிகளில் கிளாமர் தேவதை. வலுவான வில்லன் பாத்திரத்தில் முகேஷ் திவாரி கச்சிதம்.

 சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், ராதிகா ஆகியோர் அவரவர் பாத்திரத்திற்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். சூரியின் நகைச்சுவையில் சில காட்சிகளில் சிரிக்க முடிகிறது. குறிப்பாக வாழைப்பழக் காட்சி.

 யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசை படத்துக்கு வேகம் சேர்க்கிறது.

 பூஜை விறுவிறுப்பான ஹரி பிராண்ட் மசாலா படம்.

Leave a Reply