shadow

பொது சிவில் சட்டம் முதலில் இந்துக்களுக்குத்தான் வேண்டும். திருமாவளவன்

1மோடி தலைமையிலான மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வர தீவிர முயற்சியில் உள்ளது. இதற்கு முஸ்லீம் அமைப்புகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அழகிய கடன் அறக்கட்டளை’ சார்பில் சென்னையில் இதுகுறித்து கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): “கோவில் வழிபாடு, சுடுகாடு, குளம், கழிப்பிடம் போன்றவைகளில்கூட சாதியமும், மதமும் தலைவிரித்து ஆடுகின்றன. இந்து மதத்துக்கு உள்ளேயே ஜாதிக் கொடுமைகளைத் தினமும் தலித் மக்கள் அனுபவிக்கிறார்கள். பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பவர்கள், இந்துக்களாக இருக்கும் தலித் மக்களுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை? உயர் ஜாதி இந்துக்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களுக்கு இடையேகூட திருமண உறவு உட்பட பல்வேறு விஷயங்களில் தீண்டாமை தலைவிரித்துஆடுகிறது. எனவே, இந்துக்களுக்கு பொது இந்து சிவில் சட்டத்தை முதலில் கொண்டுவாருங்கள். எல்லா இந்துக்களுக்கும் சமஉரிமை கொடுங்கள். முஸ்லீம் பெண்களைப் பாதுகாக்கத்தான் இந்தச் சட்டம் என மத்திய அரசு சொல்கிறது. ஆனால், இந்தியாவில் இந்துப் பெண்களின் நிலையே மோசமாக இருக்கிறது. தான் விரும்பிய பையனை திருமணம் செய்ய முடிகிறதா? அப்படியே திருமணம் செய்தாலும் உயிரோடு இருக்க விடுகிறார்களா? இங்கு, சாதியம்தானே தலைதூக்கி நிற்கிறது. இதற்கு, ‘கௌரவக் கொலை’ என்று பீற்றிக்கொள்கிறார்கள். முதலில், இந்துப் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்.”

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): ‘‘பொது சிவில் சட்டத்துக்கும் ‘முத்தலாக்’ பிரச்னைக்கும் சம்பந்தம் இல்லை. ‘முத்தலாக்’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரப் பார்க்கிறார்கள். ஒரே நேரத்தில் ‘முத்தலாக்’ சொல்லும் முறையை இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அனுமதிக்கவில்லை. நம் உச்ச நீதிமன்றமும் ‘முத்தலாக்’ செல்லாது எனத் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லீம் பெண்களை முன்னிறுத்தி, பி.ஜே.பி அரசு இதைக் கையில் எடுத்துள்ளது. இந்தச் சட்டத்தை அவர்களால் கொண்டுவர முடியாது என அவர்களுக்கே தெரியும். கொண்டுவரவும் மாட்டார்கள். முன்பு, மதம் மாறியிருந்த தலித் மக்களை தாய்மதமான இந்து மதத்துக்கு மாற்ற வேண்டும் என ஓட்டு அரசியல் செய்தனர். இப்போது உ.பி தேர்தலை முன்வைத்து பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.”

பழ.கருப்பையா (தி.மு.க): ‘‘இஸ்லாமிய சட்டங்கள் 1450 ஆண்டுகளுக்கு முன்பே இறைவனால் உருவாக்கப்பட்டது. அதில், மனிதர்கள் தலையிட்டுச் சட்டத்தை மாற்ற முடியாது. இது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கும் பொருந்தும். மார்க்க அறிஞர்களாலேயே மாற்றம் கொண்டுவர முடியாது என்றால், மோடி கொண்டுவந்தால் சும்மா விட்டுவிட முடியுமா? நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒன்று திரண்டு போராடினால் நாடும் தாங்காது, மோடியும் தாங்கமாட்டார். எல்லா சமூகங்களிலும் இருக்கும் பிரச்னைகள் முஸ்லீம் சமூகத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். அதைச் சரிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, தான்தோன்றித் தனமாக வாக்குவங்கி அரசியலை மேற்கொள்ளக்கூடாது.”

Leave a Reply