shadow

மக்கள் மன்றத்தில் பா.ம.க.வை நேரடியாக வீழ்த்த அதிமுகவால் முடியாது. டாக்டர் ராமதாஸ்
ramdoss
வண்டலூரில் வரும் 14ஆம் தேதி பாமக நடத்த திட்டமிட்டிருந்த அரசியல் மாநாட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்  தடை விதித்துள்ளது. இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “இது முழுக்க முழுக்க அதிமுக அரசின் சதி என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாடு வரும் 14-ஆம் தேதி சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பா.ம.க. மாநாட்டுக்கு உயர்நீதிமன்றம் மூலமாக தமிழக அரசு இடைக்காலத் தடை பெற்றிருக்கிறது. அதிமுக அரசின் இந்த சதி கண்டிக்கத்தக்கது.

ஜனநாயக நாடான இந்தியாவில் மாநாடு உள்ளிட்ட கொள்கை பரப்பும் நிகழ்வுகளை நடத்துவது அரசியல் கட்சிகளின் கடமையும், உரிமையும் ஆகும். அதற்கு தடை விதிக்க தமிழக அரசு துடிப்பது முறையல்ல. கடந்த ஓராண்டில் பா.ம.க. சார்பில் மொத்தம் 8 மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

அனைத்து மாநாடுகளிலும் லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்ட போதிலும், அதனால் மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ துளியும் பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக பா.ம.க.வுக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை மாநாடுகள் பறைசாற்றி வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத அ.தி.மு.க. மக்கள் மன்றத்தில் பா.ம.க.வை நேரடியாக வீழ்த்த முடியாது   என்பதால் புறவாசல் வழியாக  மாநில மாநாட்டுக்கு இடைக்காலத் தடை பெற்றிருக்கிறது. மாநாட்டுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக இருந்தால் அடுத்த நாளே செய்திருக்கலாம். ஆனால், மாநாட்டுக்கு 3 நாட்கள் முன்பாக மேல்முறையீடு செய்து தடை பெறுவது நேர்மையான செயலா? என்பதை ஆட்சியாளர்களே சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் நலன் சார்ந்த காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்  பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாத நிலையில் அதை விரைவுபடுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஜல்லிக்கட்டு தடை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு 22 மாதங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், அதை விரைவுபடுத்தி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசால் முடியவில்லை. உழவர்களை பாதிக்கும் கெயில் எரிவாயுக் குழாய் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரு ஆண்டுகள் தாமதமாக விசாரணைக்கு வந்த போது தமிழகத்தின் சார்பில் வாதாட மூத்த வழக்கறிஞரை அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பும் அதிமுக அரசுக்கு இல்லை. பா.ம.கவின் மாநில மாநாட்டுக்கு தடை கோரும் வழக்கில் மட்டும்  தீவிரம் காட்டி,  அரசின் தலைமை வழக்கறிஞரை அனுப்பி தடை வாங்க துடிக்கிறது என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியைக்  கண்டு ஜெயலலிதாவும், அவரது கட்சியும் எந்த அளவுக்கு அச்சமடைந்துள்ளனர் என்பதை உணரலாம்.

எது எப்படியாக இருந்தாலும் சட்டத்தையும் நீதியையும் மதிக்கும் கட்சி என்ற முறையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி மதிக்கிறது. இதில் இறுதி முடிவு பா.ம.க.வுக்கு  சாதகமாக இருக்கும் என்று நம்புகிறது. இந்த மேல்முறையீடு மனு  வரும் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிறகு பா.ம.க. மாநில மாநாடு குறித்த முடிவு அறிவிக்கப்படும்.”

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply