shadow

பாகமவை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் தனியாக போட்டியிட திராணி இல்லை. அன்புமணி ராமதாஸ்
anbumani
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறுவதை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள், மற்றும் நேர்காணல் ஆகியவற்றை நடத்தி வருகிறது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக என முக்கிய கட்சிகளில் போட்டியிட விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாமக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேர்காணலை தொடங்கி வைத்தார்.

நேர்காணலை தொடங்கி வைத்து டாக்டர் ராமதாஸ் பேசியபோது, “நேர்காணல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 குழுக்கள் இந்த நேர்காணலை நடத்துகின்றன. முதலில் 46 தனித் தொகுதி வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. விஞ்ஞானரீதியில் நேர்காணல் இருக்கும். எந்த நிலையிலும் தமிழகத்துக்கு பாமக வழிகாட்டியாக இருக்கும்” என்று கூறினார்

திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கவுள்ளதாகவும் இதற்காக திமுகவில் இருந்து ஒரு முக்கிய தலைவர் பாமக தலைவரை சந்தித்து பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ராமதாஸ், “திருமண விழா ஒன்றுக்கு அழைப்பிதழ் அளிக்க வந்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக தவறாக கூறப்பட்டு வருகிறது. இது வேறு. அரசியல் வேறு. நான்கூட என் குடும்ப விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தேன்” என்று கூறினார்.

நேர்காணல் தொடர்பாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘7618 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பெண்கள் 1,028 பேரும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் 905 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர். நேர்காணல் முடிந்து முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இம்மாதம் வெளியிடுவோம். இளைஞர்கள், பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும். திமுக, அதிமுக தவிர எந்தக் கட்சி வந்தாலும் எங்களுடைய கூட்டணியில் ஏற்றுக் கொள்வோம். எங்களை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் தனியாக போட்டியிட திராணியும் தன்னம்பிக்கையும் இல்லை” என்று கூறினார்.

Leave a Reply