shadow

சென்னையில் மோடி. ஜெயலலிதா, சோ சந்திப்புக்கு பின்னர் டெல்லி திரும்பினார்.

shadow

தேசிய கைத்தறி தினத்தை அறிவிக்க ஒருநாள் பயணமாக சென்னை வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோர்களை சந்தித்த பின்னர் சற்றுமுன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மத்திய அரசு சார்பில் முதலாவது தேசிய கைத்தறி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் சந்த் கபீர் விருதுகள் மற்றும் தேசிய விருதுகளை நெசவாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட போயஸ் கார்டன் சென்ற நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து, சுமார் 50 நிமிடங்கள் அவருடன் உரையாடினார். இதனை அடுத்து அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தனது நீண்ட நாள் நண்பரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சோவை சந்தித்து   அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்

பின்னர் அங்கிருந்து விமான நிலையம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, தனது சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு சுமார் 3 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடி தன்னை சந்தித்தது குறித்து சோ செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீண்ட கால நண்பர்  சந்தித்து உடல் நலம் விசாரித்தது குறித்து சந்தோசத்தை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினேன். அரசியல் குறித்து ஏதாவது பேசினீர்களா ? என்று கேட்கப்படுகிறது.  இல்லை.  நட்பு ரீதியான விஷயங்களை மட்டுமே பேசினோம். அவரிடம்  எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. நீண்டகால நண்பரைச் சந்தித்ததால் மகிழ்ச்சி’ என்று கூறினார்.

Leave a Reply