யாருக்கு ஓட்டுப்போடலாம்? – சுஜாதா சொன்ன யோசனைகள்!

vote1. இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டி.வி-யில் பார்த்தால் போதாது, முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.

2. உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி, மக்கள், டிரைவர், வேலைக்காரி, அல்சேஷன் எல்லோருக்கும் சொல்லலாம்.

3. யாருக்கு என்று தீர்மானித்திருக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்து வோட்டுக் கேட்டவருக்குப் போடுங்கள்… தலையையாவது காட்டினாரே!

4. உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்குப் போடுங்கள். முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்தபட்சமாவது ஆதரிக்க வேண்டியவர்கள். மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, மார்கரெட் ஆல்வா, மாயாவதி, ஏன்… பூலான்தேவி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அலங்காரத்துக்கு நிற்கும் சினிமா நடிகைகளைத் தவிர்க்கவும். பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகாவிலாவது டெபுடி அசிஸ்டெண்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்துத் தொலைப்பார்கள்.

5. இதற்கு முன்பு இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால், அவர் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையைக் காட்டியிருக்கிறார் என்றால் அவருக்குப் போடலாம் (நிலா டி.வி-யில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களைப் பேட்டி கண்டபோது ஒரு பெண்மணியை ‘இப்ப இருக்கற எம்.பி. யாருன்னாவது தெரியுமாம்மா உங்களுக்கு?’ என்று கேட்டதற்கு, ‘எம்.பி-யா… அப்படின்னா?’ என்று வியப்புடன் கேட்டார்). எனவே, போடுவதற்கு முன் முகம்! அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்தக் கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்துக் கொள்வது நலம். அதைக் காட்டி ‘இதில் என்னனென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள். அதே போல், இந்த முறை கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் வாக்குறுதி என்று குட்டியாக ரேஸ் புக் மாதிரி ஒரு புத்தகம் இருக்கும். அதை ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் – பத்து மாதத்தில் மறுபடி தேர்தல் வந்தால் கேட்பதற்கு, குறிப்பாக, ‘நிலையான ஆட்சி அமைக்கப் போகிறோம்’ என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி இனி சாத்தியமில்லை. வரும் தேர்தலில் எந்த ஆட்சியாவது ஐந்து வருஷம் தாங்கினால் நான் மொட்டை போட்டுக்கொள்கிறேன்.

6. சுயேச்சை வேட்பாளர்களுக்குப் போடாதீர்கள். வேஸ்ட்.

7. கொஞ்ச நாள் தையா, தக்கா, ஆட்டம் பாட்டம், சிக்குபுக்கு, முக்காபுலா போன்ற அறிவுசார்ந்த புரோகிராம்களைப் புறக்கணித்து பிரணாய் ராய், ரபி பெர்னார்ட், மாலன் போன்றவர்கள் நடத்தும் தேர்தல் புரோகிராம்களைப் பாருங்கள். தூர்தர்ஷன்கூடப் பார்க்கலாம். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் அல்லது தலைவரும் டி.வி-யிலாவது விவாதங்களில் தோன்றலாம்.

இருப்பதற்குள் பாத்திரத் திருடன் போல திருட்டுமுழி முழிக்காதவராக, யாரைப் பார்த்தால் ‘இவர் ஏதாவது செய்வார்… முதல் நாளே உள்ளங்கை அரிக்காது’ என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்குப் போடலாம் (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது). அல்லது பத்து வார்த்தை கோர்வையாகத் தமிழ் பேசத் தெரிந்திருந்தால் போடலாம்.

இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால், சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும். ஆனால், கட்டாயமாக வோட்டுப் போடுங்கள்… அது அவசியம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *