shadow

nav39aஅவசியமான செலவு, அவசியம் இல்லாத செலவு என நம் செலவுகளை இரண்டு வகைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். நாம் செய்கிற எல்லா செலவுகளையும் ஒன்றுவிடாமல் ஒரு நோட்டில் குறித்துவைத்தால்தான் எந்த செலவு அவசியம், எது அவசியமில்லை என்று பிரித்துப்பார்த்து, அடுத்துவரும் மாதங்களில் அதைத் தவிர்க்க முடியும்.  

எது அவசியமான செலவு, எது அவசியமில்லாத செலவு என எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா?

சிம்பிள். கட்டாயம் செய்ய வேண்டியது அவசியமான செலவு. குழந்தைகளின் படிப்புக் கட்டணம் அவசியமான செலவு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சினிமா, ஹோட்டலுக்கு போவது அநாவசியமான செலவு. இனி செலவுகளை எப்படி திட்டமிட்டு செய்வது என்று சொல்கிறேன்.  

நிகர வருமானம்!

முதலில் உங்கள் மாத நிகர வருமானம் எவ்வளவு என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களது மாத நிகர வருமானம் என்பது உங்களது மொத்த கூடுதல் வருமானத்திலிருந்து பிடித்தம் போக மீதியுள்ள தொகை.

பிடித்தங்கள் பலவகை.  பணியாளர் வருங்கால வைப்பு நிதி, தொழில் வரி மற்றும்

வருமான வரிகள் இதில் அடங்கும். வீட்டு வாடகை, வட்டி, பங்கு முதலீட்டுக்குக் கிடைக்கும் டிவிடெண்ட் ஆகியவற்றை வருமானத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதாந்திர வரவு, செலவு திட்டம்

உங்கள் மாதாந்திர செலவுகளைக் கீழ்க்கண்ட முறையில் வகைப்படுத்தலாம்.

– வீட்டுத் தேவைகள் (வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், வீட்டுப் பராமரிப்புச் செலவு மற்றும் தொலைபேசிக் கட்டணம்).

– அன்றாட வாழ்க்கை செலவுகள் (பலசரக்கு, காய் கறிகள், பால், தயிர் மற்றும் பழங்கள் ஆகியவை).

– தனி மனித செலவு (பெட்ரோல், மொபைல் கட்டணம், இணையதளச் செலவுகள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புச் செலவுகள்).

– குழந்தைகளின் செலவுகள் (படிப்பு, கூடுதல் கல்வி சார்ந்த செலவுகள்).

இந்த செலவுகளை வகைப் படுத்தி நாமே பட்டியலிடுவதன் மூலம்  அநாவசிய செலவுகளைத் தவிர்க்கலாம்.

கடன் பொறுப்புகள்!

நம்மில் பெரும்பாலானவர் கள், பல்வேறு கடன்களை வாங்கிவிட்டு, அந்தக் கடனைத் திருப்பிக்கட்ட வழிதெரியாமல் தத்தளிக்கிறார்கள். கடன்  வாங்குவதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், கணக்கு இல்லாமல் கடன் வாங்கினால் பிரச்னைதான். அதனால் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன்களைக் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

கீழே சொல்லப்பட்டிருப்பது போல, உங்கள் தேவைகளை இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

சேமிப்புத் தொகை ஃபார்முலா:

சேமிப்புத் தொகை = மாத நிகர வருமானம் – மாத நிகரச் செலவுகள்.

நாம் செய்யும் முதல் செலவே சேமிப்பாக இருப்பது நல்லது. இதைக் கடைப்பிடிப் பவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி வரவே வராது. அதனால், மாத நிகர வருமானத்தின் ஒருபகுதியை சேமிப்புக்காக ஒதுக்கிவைத்து மீதமுள்ள தொகையைச் செலவு செய்வது அவசியம்.

இன்னும் திட்டமிடுவோம்…

இதுவரை நிதித் திட்டமிடு தலின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பார்த்தோம். இனி, நிதித் திட்ட மிடுதலை எப்படி செய்வது என்று பார்ப்போம்.  

நான்கு படிகள்

நிதித் திட்டமிடுதலை பின்வரும் நான்கு படிகளாகச் செய்ய வேண்டும்.

1. எதிர்காலத் தேவைகளைக் கண்டறிதல்.
2. தேவைகளை வகை படுத்துதல் மற்றும் கால அவகாசத்தைக் கண்டறிதல்.
3. எதிர்காலத் தேவைக்குண் டான பணத்தைக் கண்டறிதல்.
4. நிதித் திட்டத்தை உருவாக்கி அதற்குண்டான முதலீட்டுத் திட்டத்தை உருவாக்குதல்.

மேற்கண்ட நான்கு படிகளைப் பற்றி இனி சற்று விரிவாகப் பார்ப்போம்.

எதிர்காலத் தேவைகளைக் கண்டறிதல்

குழந்தைகளின் கல்விச் செலவு.
குழந்தைகளின் திருமணம்.
வீடு/நிலம் வாங்குவது.
சுற்றுலா செல்வது.
ஓய்வுக்கால நிதி சேர்ப்பது.

மேற்கண்ட தேவைகள் அனைத்தும் மிகவும் அத்தியாவசியமானது.  இவைதவிர, ஒவ்வொரு தனிமனிதருக்குமான தேவை அவரவர் விருப்பம்போல் மாறுபடும். உங்களின் தேவை களைக் கண்டறியும்போது அதன் மதிப்பீடு, கால அவகாசம் மற்றும் உண்மையான தேவை இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். உதாரணத்துக்கு, உங்களின் வருமானம் வருடத்துக்கு

5  லட்சம் ரூபாயாக இருப்பின், நீங்கள் 5 – 6 வருடங்களுக்குள் வீடு வாங்க இலக்காக வைப்பது எட்டமுடியாத இலக்காகும். ஆகவே, உங்களின் இலக்கு உங்களின் வருமானத்தைப் பொறுத்து அமையுமாறு வைத்துக்கொள்வது அவசியம்.

தேவைகளின் முக்கியமும் அதற்கான கால அவகாசமும்

குறுகியகாலத் தேவைகள் (3 வருடங்களுக்குட்பட்டது)
நடுத்தரகாலத் தேவைகள் (3 – 5 வருடத்துக்கு கீழும்)
நீண்டகாலத் தேவைகள் (5 வருடத்துக்குமேல்)

மேற்கண்டவாறு உங்கள் தேவைகளைப் பிரித்துக் கொள்வது அவசியம். இவ்வாறு பிரிப்பதால் உங்கள் முதலீட்டை அதற்கு தகுந்தவாறு பிரித்து முதலீடு செய்ய மிக வசதியாக இருக்கும். முதலீட்டுப் பரிந்துரைகளும் கால அவகாசத்துக்குத் தகுந்தவாறு மாறுபடும். உதாரணத்துக்கு உங்கள் தேவை மூன்று வருடங் களுக்குள்ளாக இருப்பின் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பங்குச் சந்தை வருமானமானது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங் களுக்குத் தகுந்தவாறு மாறக் கூடியது. நிதித் திட்டமிடுதலின் முதல் குறிக்கோளே, உங்களுக்குத் தேவைப்படும் காலத்தில் தேவையான பணத்தைக் கிடைக்கச் செய்வதற்கான திட்டமே. ஆகவே, கால அவகாசத்துக்குத் தகுந்தவாறு குறுகியகாலத்துக்கு வைப்பு நிதி, கடன் ஃபண்டுகளிலும், நீண்டகாலத் தேவைகளுக்குப் பங்குச் சந்தை சார்ந்த முதலீடு களிலும் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது.

இலக்குகளை மதிப்பிடுதல்

உங்கள் எதிர்காலத் தேவையை அறிந்தபின் அதற்குண்டான பண மதிப்பீட்டை அறிந்து அதற்குத் தகுந்தவாறு நிதித் திட்டமிடுவது அவசியம். உதாரணத்துக்கு, ஒரு பிள்ளையின் கல்விச் செலவுக்கு இன்றைய மதிப்பீட்டில் ரூ.12 லட்சம் செலவாகும். இது தேவைக்கான கால அவகாசத்தைப் பொறுத்து அதிகமாகும். இப்படியாக இன்னும் பிற தேவைகளுக்கான பண மதிப்பீடு மற்றும் கால அவகாசத்தையும் கணக்கிடுவது அவசியம்.

முதலீட்டுத் திட்டம் உருவாக்குதல்

முதலீடு சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்முன் உங்கள் இலக்குகளை மனத்தில் வைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல முதலீடு செய்வது அவசியம். உங்களின் எதிர்காலத் தேவைகளை, இன்றியமையாத தேவைகள், விரும்பத்தக்க தேவைகள் மற்றும் முயன்றால் அடைய முடியும் என்கிற மாதிரியான தேவைகள் என்று பிரித்து அதற்குத் தகுந்தாற்போல் முதலீடு செய்வது உத்தமம். உங்கள் முதலீட்டின் பெரும்பகுதியை இன்றியமையாத தேவை களுக்குண்டான முதலீடாக இருக் குமாறு பார்த்துக்கொள்ளவும். உங்கள்  தேவைக்கதிகமாகப் பணவரவு இருக்கும்போது அந்தப் பணத்தை உங்களின் மற்ற இலக்குகளுக்காக முதலீடு செய்யலாம்.

உதாரணமாக, உங்கள் குழந்தையின் எதிர்கால கல்விச் செலவானது இன்றியமையாதது. குழந்தைகளுக்கு ஒரு நல்ல படிப்பினைத் தந்து,  அவர் களின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருப்பது அனைத்து பெற்றோர்களின் கடமை. இது மாதிரியான செலவுகளை நம்மால் தள்ளிப்போட முடியாது. ஆனால், ஒரு கார் வாங்குவது இன்றியமையாத தேவை அல்ல. இதனை நம் விருப்பம்போல் மாற்றிக்கொள்ள இயலும். ஆகவே, முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கும்முன் எந்த இலக்குக்கான முதலீடு மிக முக்கியம் என்று அறிந்து முதலீடு செய்வது மிகவும் அவசியமாகும்.

Leave a Reply