pk movieபிகே… பாலிவுட்டே உச்சிமுகர்ந்து கொண்டாடும் படம்!

டைரக்டர் ராஜ்குமார் ஹிரானியின் 4வது ஹிட் படம் இது. வெறும் ஹிட் படங்களாக மட்டும் இல்லாமல் தன் படங்களில் போரடிக்காமல் நீதிபோதனை வகுப்பெடுப்பது ஹிரானி ஸ்டைல். காந்தியம், கல்விமுறையின் ஓட்டைகள் பற்றித் தன் முந்தைய படங்களில் பேசியவர் இப்படத்தில் கடவுள் பற்றியும் அது சார்ந்த நம்பிக்கைகள் பற்றியும் பேசி இருக்கிறார்.

அதென்ன பிகே? பூச்சி, ஜந்து, அழகுப் பெண், சரக்கடித்த பிறகு… என பல்வேறு அர்த்தங்களை இந்தி அகராதி சொல்கிறது. ஹிரானியிடம் கேட்டால், ‘பெர்ஃபெக்டர் கில்லர்’ எனச் சிரிக்கிறார். சரி, பிகே படத்தின் கதை என்ன?

அமீர்கான் ஒரு வேற்றுக்கிரகவாசி. அங்கிருந்து ராஜஸ்தானில் வந்து இறங்கும் அவர் தன்னுடைய ‘ஸ்பேஸ்ஷிப் ரிமோட் கன்ட்ரோல் லாக்கெட்’டைத் திருடனிடம் பறிகொடுக்கிறார். தன் கிரகத்துக்குப் போக முடியாமல் தவிக்கும் அவர் இந்தப் பூமியில் தங்க வேண்டிய சூழல். இங்கு அவர் என்னவெல்லாம் ஆகிறார்? மற்றவர்களை என்னவெல்லாம் ஆக்குகிறார்? என்பதே படத்தின் ஒன்லைன்.  நினைக்கவே ஜாலியாய் இருக்கும் இந்தக் கற்பனையை வைத்து ஒவ்வொரு மதத்தையும் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளையும் போகிற போக்கில் வலிக்காமல் சாடுகிறார் ஹிரானி. ‘கர்ணம் தப்பினால் மரணம்’ போன்ற கதைக்களத்தில் தன் நண்பர் அபிஜத் ஜோஷியுடன் மூன்று வருடங்கள் உட்கார்ந்து செதுக்கிச் செதுக்கி திரைக்கதை, வசனத்தை உருவாக்கி இருக்கிறார்.

‘கடவுளைக் காணவில்லை’ போஸ்டர் அடிப்பதும், சிவபெருமான் மேக்அப் போட்டவரைத் துரத்துவதும், கோவிலில் செருப்பைப் பூட்டுப் போட்டு பாதுகாப்பதும் என சீரியஸ் முகபாவத்தோடு அமீர்கான் பண்ணுவதை எல்லாம் தியேட்டரில் கைதட்டி ரசிக்கிறார்கள். இந்தப்படத்தில் ஏலியன் அமீர்கானுக்கு உதவி செய்யும் டிவி நிருபராக அனுஷ்கா சர்மா. ‘நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறது பிகே?’ என சரக்கடித்துவிட்டு அமீர்கானைக் கேட்குமிடத்தில் தியேட்டரில் ‘விராட் கோலியைக் கட்டிக்கோ!’ என இந்தியில் கூச்சலிடுகிறார்கள்.

முதல்பாதியின் விறுவிறு சுறுசுறு இரண்டாம் பாதியில் இல்லாதது படத்தின் மைனஸ் என்றாலும் மொத்தப் படத்தையும் தன் வித்தியாசமான உடல்மொழியாலேயே தூக்கி நிறுத்திவிடுகிறார் அமீர்கான். இந்தப் படத்துக்காக காதுகளைக் கூடுதலாக நிமிர்த்தி, கண்களை இமைக்காமல் நடித்திருப்பது, ரோபோபோல் நடப்பது, ஓடுவது, குதிப்பது, டான்ஸ் ஆடுவது என வெரைட்டி காட்டி இருக்கிறார். கார்ப்பரேட் சாமியார்களைத் தோலுரிக்கும் அதே சமயத்தில் கடவுள் பற்றிய கேள்வியை அடுத்த தலைமுறையினருக்கு வேறு கோணத்தில் விதைத்த வகையில் இந்த பிகே.. டபுள் ஓ.கே!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *