shadow

pillow middle 1

உப்பில்லாத சாப்பாடுபோல்தான் இங்கு பலருக்கு தலையணை இல்லாத உறக்கமும்.  ‘‘தலையணை வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது என்கிறார், சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி.

தலையணை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும், பயன்படுத்தினால் நேரும் பாதிப்புகள் பற்றியும் இங்கே பேசுகிறார் டாக்டர்.

”தலையணை என்பது ஆதிகால மனிதர்களிடமோ… அதற்கு பிறகு வந்த மனிதர்களிடமோ இல்லவே இல்லை. சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது. இதுவும்கூட ராஜாக்கள், பணக்காரர்கள் என்று மட்டுமேதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர் என்று அனைவரும் தலையணைக்கு அடிமையாகிவிட்டனர். இன்று அது வளர்ந்து விதவிதமான, வண்ண வண்ணமான தலையணைகள் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்திருக்கின்றன.

நடக்கும்போது நாம் எப்படி நேராக நடக்கிறோமோ, அப்படித்தான் படுக்கும்போதும் சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும். அதேபோல படுக்கும்போது எக்காரணம் கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்து சமமான தரையில் உறங்க வேண்டும்.

பஞ்சு மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய தலையணையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும். பின் அங்கே உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்பு தொடங்கி பலவிதமான பிரச்னைகள் வரக்கூடும்.

மிக உயரமான, ஸ்பிரிங் போல ஏறி இறங்கும் தன்மையுள்ள தலையணைகளைப் பயன்படுத்துவதால் கழுத்து எலும்பு தேய்மானம், நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டத் தடை, மூளை பாதிப்பு போன்றவை ஏற்படுவதாக நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் சொல்கின்றன.

‘தலையணை இல்லாமல் என்னால் உறங்கவே முடியாது’ என்பவர்கள், அதிக பாதிப்பை விளைவிக்கக்கூடிய மெல்லிய, மிருதுவான, ஸ்பிரிங் தன்மையுள்ள தலையணை பயன்பாட்டை தவிர்த்து ‘குறைவான பாதிப்பைத் தரும்’ தடிமனான தலையணையை பயன்படுத்தலாம். இவை, அதிக உயரம் இல்லாமல், சின்னதாகவும், இயற்கையான பொருட்களால் ஆனதாகவும் இருக்க வேண்டும். தலையணையை தலைக்கு மட்டும் வைக்காமல், தோள்பட்டையிலிருந்து தலை முழுவதற்கும் வைப்பது நல்லது.

நம் தலைமுறையினர் தலையணைக்கு அடிமையாகிவிட்டோம். அதனால், முடிந்தவரை தலையணை பயன்படுத்துவதை குறைத்து.. தலையணை இல்லாமல் சமமான தரையில். இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி உறங்குவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பிறந்த குழந்தைகள் தொடங்கி, வளரும் குழந்தைகள் என யாருக்கும் தலையணை வைத்து பழக்கப்படுத்த வேண்டாம். அதனால், இளம் பிஞ்சுகளின் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு, தலையணை வைத்து தூங்குவது நல்லதில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லி பழக்கப்படுத்த வேண்டும்” என்று எச்சரிக்கும் டாக்டர்,

”இன்றைக்கு சந்தையில் உள்ள பிளாஸ்டிக் பாய் போன்றவற்றில் உறங்குவது, ஆபத்தை நாமே விலைகொடுத்து வாங்குவதாகவே இருக்கிறது. பிளாஸ்டிக்கின் உஷ்ணம், நம் உடல் மற்றும் சருமத்துக்கு நல்லதல்ல” என்று பாய் பற்றிய எச்சரிக்கையும் தந்தார்.

Leave a Reply