shadow

tasmacதமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி பல்வேறு கட்சியினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் கடந்த சில நாட்களாக வன்முறையாக மாறி வருகின்றது. டாஸ்மாக் கடை முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய காலம் போய் தற்போது டாஸ்மாக் கடையினுள் புகுந்து மதுபாட்டில்களை அடித்து நொறுக்குவது, கடைக்கு தீவைப்பது, பெட்ரோல் குண்டுகள் வீசுவது என வன்முறை களமாக மாறி வருகிறது. இந்த போராட்டங்கள் உண்மையாகவே மதுவுக்கு எதிரான போராட்டம்தானா? என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் மனதில் கிளப்பி வருவதால் தமிழகம் எங்கும் பதட்ட நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கடை ஊழியர் பரிதாபமாக பலியானார். மர்ம நபர்களின் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு டாஸ்மாக் ஊழியர் பலியாகி உள்ள சம்பவம் டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்குட்பட புதுப்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனை ஊழியராக இருப்பவர் தலைவாசலை அடுத்த நாவலூரை சேர்ந்தவர் செல்வம். இவர், நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு கடைக்குள் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சில மர்ம நபர்கள் அந்த கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதை தொடர்ந்து அந்த கடை தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைக்குள் இருந்த மது பாட்டில்கள் வெடித்து சிதறி மேலும் தீ பரவி இருக்கிறது. இதனால், கடை முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு ஊழியர் செல்வம் உயிருக்கு போராடி இருக்கிறார். தீப்பற்றி எரியும் கடைக்குள் இருந்து வெளியே வர முடியாத செல்வம், சக பணியாளர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து தன்னை காப்பாற்றும்படி கதறி இருக்கிறார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டாஸ்மாக் பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனே டாஸ்மாக் பணியாளர்கள், கடைக்குள் மயக்க நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து டாஸ்மாக் மண்டல் முதுநிலை மேலாளர் தியாகராஜன், சேலம் மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) பிரபாகரன், சேலம் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாளை அடுத்து இந்த போராட்டத்தால் இன்னும் ஒரு உயிர் பலியாகியுள்ளது. எனவே இந்த பிரச்சனைக்கு உடனடியாக அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply