shadow

தமிழர்களை அழிக்க இலங்கையுடன் மறைமுக ஒப்பந்தமா? கேரளா மீது பழ.நெடுமாறன் திடுக்கிடும் குற்றச்சாட்டு

nedumaranதமிழகத்தில் விளையும் காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டிய கேரள அரசு, தமிழக காய்கறிகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கேரள அரசு தமிழக விவசாயிகளை அழிக்க இலங்கை அரசுடன் மறைமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை தமிழர் தேசிய விடுதலை முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் காய்கறிகளுக்கு  தடை விதிக்கும் கேரள அரசின் போக்கை கண்டித்து, தமிழர் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பழ.நெடுமாறன், செய்தியாளர்களிடம் பேசியபோது, “முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை பெறும் தமிழக விவசாயிகள் , தமிழகத்தில் விளையும் காய்கறிகளையும், இறைச்சிகளையும் கேரளாவிற்கு  தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். எங்களுக்கும், கேரள மக்களுக்கும் எவ்வித  மனக்கசப்பும் இல்லை. ஆனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்  நியாயமாக வந்த தீர்ப்பினை அடுத்தும் கேரள அரசியல்வாதிகள்,   தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் 95 சதவிகிதமான காய்கறிகள்  நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன என்ற பொய்யான  குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.

காய்கறிகளில் இருக்கும் நச்சுத்தன்மையின் அளவை யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. பயிர்கள் விதைக்கப்பட்ட காலம், பூச்சி மருந்துகள் அடிக்கப்பட்ட நேரம், அவை அறுவடையான காலம் ஆகியவற்றை கணக்கிட்டுத்தான் நச்சுத்தன்மையின் அளவை கணக்கிட வேண்டும். அதனையும் துல்லியமாக கணக்கிட முடியாது. இதன் மூலம் கேரள அரசு போலியான வாதத்தை தமிழக விவசாயிகளுக்கு எதிராக வைக்கிறது என தெரிகிறது.

டெல்லியிலிருக்கும் கேரள உயர் அதிகாரிகள், இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, இலங்கையிலிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்யும் நோக்கில்தான் தமிழக விவசாயிகளின் காய்கறிகளை புறக்கணிக்கும் செயலை செய்கின்றன என நான் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன். பிரதமர் மோடி, இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு தமிழக விவசாயிகளுக்கு நியாயம் வழங்க முன்வர வேண்டும்.

கேரள அரசும் தங்களுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  தமிழக அரசு உடனடியாக  கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காய்கறிகளை கொண்டு செல்வதை தடுக்கும் செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக முதற்கட்டமாக தேனி, கம்பம் பகுதி விவசாயிகளை அழைத்து போராட்டம் நடத்தியுள்ளோம்.

அடுத்துவரும் காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கம்,  தமிழர் நலன் விரும்பும் அமைப்புகளையும் கூட்டி கேரளாவை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Leave a Reply