shadow

பதான்கோட் பாணி தாக்குதல்கள் தொடரும்: தீவிரவாதி ஹபீஸ் சயீத் எச்சரிக்கை
terrorist
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்கிய நிலையில் அதே பாணியில் இந்தியாவின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடரும் என பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத்-உத்-தவா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பையில் தாக்குதல் நடத்திய ஹஃபீஸ் சயீத்தின் தீவிரவாத அமைப்பு தற்போது பாகிஸ்தானில் அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாதில் நேற்று முன் தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹபீஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

காஷ்மீரில் 8 லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியிருக்கும்போது, காஷ்மீரிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது போன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு உரிமை இல்லையா? காஷ்மீர் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதுபோன்ற தாக்குதல்களை நடத்தலாம்.

பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய ஐக்கிய ஜிகாதி கூட்டமைப்பின் தலைவர் சயீத் சலாஹுதீனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது பதான்கோட்டில் நடைபெற்ற தாக்குதலை மட்டும்தான் பார்த்திருக்கிறீர்கள். இனி இது போன்ற தாக்குதல்கள் தொடரும் என்று பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள்தான் பதான்கோட்டில் தாக்குதல் நடத்தினர் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஐக்கிய ஜிகாதி கூட்டமைப்பு என்ற இயக்கத்தினரே அந்த தாக்குதலை நடத்தியதாக ஹஃபீஸ் சயீத் பேசியுள்ளார்.

Leave a Reply