பரமக்குடி கலவர சம்பவத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது சரிதான் என்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11.9.11 அன்று போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர், பலருக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை செய்வதற்காக நீதிபதி கே.சம்பத் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து 13.9.11 அன்று அரசு உத்தரவிட்டது.

இந்த விசாரணை கமிஷன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. அதோடு சம்பவத்துக்கு தொடர்புடைய அனைவரையும் அழைத்து விசாரித்து, வாக்குமூலத்தை பதிவு செய்தது. அதனடிப்படையில் இந்த சம்பவம் குறித்த முடிவுகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட 3 புத்தகங்களாக, 7.5.13 அன்று தமிழக அரசிடம் விசாரணை கமிஷன் அளித்தது.

தமிழக சட்டசபையில் நீதிபதி சம்பத் விசாரணை கமிஷனின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் விசாரணை கமிஷனின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

ஆதிதிராவிடர் தலைவரான ஜான்பாண்டியன், 11.9.11 அன்று பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் சமாதிக்கு செல்வதாக இருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்ற ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த சிறுவன், வேறு சாதியைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.

அந்த சிறுவனின் இறப்புக்கும் வருத்தம் தெரிவிப்பதற்காக பச்சேரிக்கு ஜான்பாண்டியன் செல்ல இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அவரது பச்சேரி மற்றும் பரமக்குடி வருகையாலும், பேச்சாலும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேவரினத்தவர்களுக்கு இடையே மோதலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் போலீசுக்கு ஏற்பட்டது.

எனவே தூத்துக்குடி உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவுப்படி, 11.9.11 அன்று ஜான்பாண்டியன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள் 200 பேர், பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் கூடினர். அங்கு சாலையில் அமர்ந்துகொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். எனவே சமாதிக்கு செல்லும் மற்றும் அங்கு சென்றுவிட்டு திரும்பும் வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கின.

அவர்களுடன்…

போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, மற்றொரு ஆதிதிராவிடர் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியின் வருகை, அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்தது. அவரை அனுமதிக்கும்போது, ஜான்பாண்டியனுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதால் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

எனவே சாலை மறியல் போராட்டம் தீவிரமடைந்தது. கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் வந்த வாகனங்கள், அவசர சிகிச்சை ஊர்திகள் போன்றவை நிறுத்தப்பட்டன. கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்களுடன் இருந்த வெறுப்புணர்வால், அவர்களை வாகனங்களில் இருந்து வெளியே இழுக்க ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் முற்பட்டனர். ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள்தான் கலவரக்காரர்கள். அவர்கள் தீவைப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் செந்தில்வேலன், காவல்துறை தலைவர் சந்தீப் மிட்டல், துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் காவலர்கள் பலருக்கு காயம் ஏற்படுத்தினர். காவலர்கள் தடுத்திராவிட்டால் கணேசன் இறந்திருப்பார் என்று இந்த கமிஷன் நம்புகிறது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து போலீசார் தடியடி பிரயோகம் செய்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஆனால் கலவரக்காரர்கள் கலைந்து செல்லாமல் பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தை, அங்கிருந்த காவலர்களை உள்ளே வைத்து பூட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

எனவே அந்த நிர்வாகத்துறை நீதிபதியான கமுதி வட்டாட்சியர் சிவகுமார், துப்பாக்கி சூடு நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். வன்முறையை கட்டுப்படுத்தவும், மற்ற சாதியினர் வசிக்கும் பகுதிக்கு வன்முறை பரவுவதை தடுக்கவும், இந்த துப்பாக்கி சூடு அவசியம் என்று இந்த கமிஷன் கருதுகிறது.

துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்திருந்தால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக ஏற்படுவதோடு, தென்மாவட்டங்களுக்கும் வன்முறை பரவியிருக்கும். எனவே இந்த துப்பாக்கிச் சூடு முற்றிலும் அவசியம்தான்.

கலவரத்தின்போது போலீசார் மிகவும் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தாலும், சில காவல்துறையினர் போலீஸ் நிலை ஆணைக்கு மாறாக, கலவரத்துக்கு பிறகு சூழ்ந்துகொண்ட கலவரக்காரர்களை அடித்தது மனதுக்கு உகந்ததாக இல்லை. கலவரக்காரர்களின் நடத்தை மன்னிக்க முடியாதது. அவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

வெள்ளைச்சாமி உள்ளிட்ட சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பொறுப்பான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு, அரசு வேலை, காயமடைந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இறந்த தலைமை காவலர் செல்வத்தின் குடும்பத்துக்கு கணிசமான கருணைத்தொகை வழங்க வேண்டும்.

கலவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சத்தியமூர்த்தி என்ற 10-ம் வகுப்பு மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். இதுபோன்ற கலவரம் நடக்காமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *