shadow

im20120245_parvatikalyanam

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது சிவபெருமானைக் கல்யாண சுந்தரமூர்த்தியாகக் குறித்து அனுஷ்டிக்கும் விரதம். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நின்று பூரண கலைபெற்று ஏழாமிடமாகிய அங்கிருந்துதான் பூரண கிரணத்தை உத்திர நட்சத்திர குணத்தோடு பூமிக்குக் கொடுத்தலால் இத்தினம் விசேஷமானதாகும். பார்வதி பாகராகிய சிவபெருமானைத் திருமணக்கோலத்தோடு தியானிப்பதாகலின் திருமண விரதம் எனப்படும்.

அம்மையப்பன் வடிவங்களைப் பொன்னால் அமைத்து, அபிஷேக ஆராதனைகள் புரிந்து, சிவபெருமானை உமாதேவியாரோடும் எழுந்தருளச் செய்து பூசை, அர்ச்சனை, தூபதீபங்களாதி கிரியைகளை விதிப்படி செய்தல் வேண்டும். ஓர் அந்தணனை மனையாளோடழைத்து வேண்டியன கொடுத்து அமுது செய்வித்தல் வேண்டும். உமாபிராட்டியாரைத் திருமணம் புரியுந்தன்மையுடன் சிவன் திருக்கோலத்தை மனதில் தியானம் செய்தல் வேண்டும். ஆலயம் சென்று வணங்கி, அஸ்தமனத்தின் மேல் இரவிலே உணவுண்டு தருப்பையில் உறங்க வேண்டும். மற்றைநாள் காலையில் சிவபெருமானைத் தேவியோடு தாபித்திருந்த பொற்கலசத்துடன், பிறபொருட்களையும் தானமாகப் பிராமணருக்கு ஈந்து, வணங்கிச் சிவனடியாருடன் பாரணை செய்யின் எண்ணிய வரங்களையடைவர்.

Leave a Reply