shadow

எல்லையில் தேவையில்லாத பதட்டத்தை இந்தியா உருவாக்குகிறது. பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

pakistanபாகிஸ்தானில் இந்தியா தீவிரவாதத்தை ஆதரிப்பதுடன் தேவையில்லாமல் எல்லையில் பதட்டத்தை உருவாக்கி வருவதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டி வரும் நிலையில் நேற்று பாகிஸ்தான் எல்லையில் சிலாகோட் என்ற பகுதியின் அருகே உள்ள குந்தன்பூர் என்ற கிராமத்திற்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் வருகை தந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் மாநிலம் பற்றி விவாதிக்க கூடாது என்றும், பிரிவினைவாதிகளுடனான சந்திப்புக்கு எதிர்ப்பும் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஆதரிப்பதுடன், எல்லையில் தேவை இல்லாமல் பதற்றத்தையும் இந்தியா உருவாக்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் ராணுவம் முழு பலம் பெற்று வருகிறது. தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க பாகிஸ்தான் ராணுவம் எதற்கும் தயாராக உள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் மீது இந்தியாவின் குறுக்கீடு குறித்த ஆதாரங்களை அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் அளிப்பார். அக்டோபர் மாதம் அமெரிக்க பயணத்திலும் இந்த பிரச்னை குறித்து பிரதமர் தெரிவிப்பார். இந்தியா, பாகிஸ்தான் மீது போரை திணிக்கிறது. அப்படி பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்” என்றார்.

Leave a Reply