shadow

Tamil-Daily-News-Paper_3131786584855

பக்தர்களின் நம்பிக்கையில்தான் கடவுளின் பெருமை உலகிற்கு தெரிகிறது. இந்த கோயிலுக்கு சென்றால், வேண்டியது நடக்கும் என்று பலனடைந்த பக்தர்கள் சொல்வதை கேட்டுதான், பலர் நம்பிக்கையுடன் கோவில்களுக்கு வருகிறார்கள். அந்த வகையில் மண்டியா மாவட்டம் மத்தூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்றால், கண்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று கடந்த 800 ஆண்டுகளாக மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாக கண்ணொளி நாராயணன் என்றே பக்தர்கள் பெருமையுடன் அழைக்கிறார்கள். கடந்த 12ம்நூற்றாண்டில் மைசூரு மாகாணத்தை விஷ்ணுவர்தன் மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவரது தாயாருக்கு திடீரென உடல் நலம் பாதித்து இரு கண்களும் பார்வை இழந்து விட்டது. தயாருக்கு நடந்த சம்பவத்தை நினைத்து மன்னர் கவலையுடன் இருந்தார். பல மருத்துவர்களிடம் காட்டியும், பார்வை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே பதில் கிடைத்தது. 

தாயை நினைத்து பல நாட்கள் கண்ணீருடன் மன்னர் இருந்தார். ஒருநாள் இரவில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது, அவரின் குலகுருவான ஸ்ரீமத்இராமானுஜர் கனவில் தோன்றி, உமது தாயாருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டுமானால், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்தால், பார்வை கிடைக்கும் என்றார். அப்போது தனது தாய் முதியவராக இருப்பதால், அவ்வளவு தூரம் அழைத்து செல்வது சிரமமானது. மாற்றுவழி என்னவென்று தனது குலகுருவிடம் ஆலோசனை கேட்டார் மன்னர். அப்போது காஞ்சியில் நிலை நின்றுள்ள வரதராஜ பெருமாளை சிலையாக வடித்த சிற்பியை அழைத்து வந்து, அவர்கையில் சிலை வடித்து வரதராஜசுவாமி என்ற பெயரில் கும்பாபிஷேகம் நடத்தி பிரதிஷ்டை செய் என்றார்.

தனது குலகுருவின் ஆலோசனைபடி காஞ்சிபுரம் சென்ற மன்னர் விஷ்ணுவர்தன், அங்கிருந்து சிற்பிகளை மத்தூர் அழைத்து வந்தார். சுமார் 16அடி உயரத்தில் வரதராஜ பெருமாள் சிலை வடித்து 48 நாட்கள் நவதானியங்களில் வைத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தினார். பிரதிஷ்டை செய்து மகாகும்பாபிஷேகம் நடத்தி 48நாட்கள் மண்டல பூஜை முடிந்ததும் மன்னரின் தாயிக்கு இழந்த கண்பார்வை மீண்டும் கிடைத்தது. அதன் மூலம் கண்ணொளி நாராயணன் என்று வரதராஜ பெருமாளை மன்னர் விஷ்ணுவர்தன் மட்டுமில்லாமல் அவர் அரசாட்சியின் கீழ் இருந்த குறுநில மன்னர்கள், நாட்டுமக்கள் அழைத்தனர். இன்று மத்தூரில் கோயில் அமைந்துள்ள இடத்தை கர்நாடகாவின் காஞ்சிபுரம் என்றே மக்கள் பெருமையுடன் அழைக்கிறார்கள். தினமும் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

பழைமையான வரதராஜ சுவாமி கோயில்சில ஆண்டுகளுக்கு முன் அதன் கட்டிடங்கள் சிதிலமடைந்தது. கோயில் உள்ளிருந்த சில கற்களை வெளியில் அகற்ற ஹிந்து சமய அறநிலையதுறை முடிவு செய்தது. அதற்காக அதிகாரி ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர் கோயிலுக்கு சென்று எந்த கல்லை வெளியில் கொண்டு வர வேண்டும் என்று பரிசீலனை செய்தார். அப்போது கல்லில் இருந்து இனம்புரியாத கதிர்வீச்சு அவரின் உடலை தொட்டது. பின் பெங்களூரு திரும்பினார். அன்றிரவு அதிகாரியின் கனவில் ஒரு மனிதர் தோன்றி, எக்காரணம் கொண்டும் கல்லை வெளியில் எடுக்க வேண்டாம் என்று மீண்டும், மீண்டும் உணர்த்தியது. ஆனால் மறுநாள் அதை கண்டு கொள்ளாமல், ஊழியர்களுடன் சென்று கல்லை வெளியில் அகற்றும் பணியை தொடங்கினார்.

5நாட்கள் கடந்தும் கல்லை வெளியில் எடுக்க முடியவில்லை. மீண்டும் அதிகாரியின் கனவில் வந்த ஒருமனிதர், சாட்டையால் ஓங்கி அடித்தார். கண் விழித்து பார்த்த போது, அவரது உடலில் ரத்தகாயங்களுடன் சிவப்பு வண்ணத்தில் கொப்பளங்கள் எழும்பி இருந்தது. அதை பார்த்து பயந்து போன அதிகாரி கல்லை அகற்றும் பணியை நிறுத்தினார். இன்று வரை கோயிலுக்கு சென்று உள்பக்க வாசலில் உள்ள கல்முன் நின்றால் கதிர்வீச்சு உடலில் தொடுவதை உணர முடிகிறது. கண்பார்வையில் கோளாறு உள்ளவர்கள் மத்தூர் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து வேண்டினால், கண்ணொளி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் உள்ளது.

Leave a Reply