shadow

online_2595696f

அமெரிக்காவில் நர்ஸிங் படித்த இந்திய வம்சாவளி மாணவி ஆர்யா சிங் ஆன்லைன் மூலம் சயனைடு வாங்கிச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டதன் காரணமாக, அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அவருடைய அம்மா சுஜாதா சிங் வழக்கு தொடர்ந்துள்ள செய்தியைச் சமீபத்தில் படித்திருக்கலாம்.

இதேபோல ஆன்லைன் மூலம் ஆபத்தான மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதும் உயிரைப் பறிக்கும் ஆபத்தாக மாறலாம் என்ற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இந்தியாவில் ஆன்லைன் மருந்து விற்பனையைத் திறந்துவிட மத்திய அரசு யோசித்துள்ள நிலையில், நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த வாரம் கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள் நடந்ததைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேநேரம், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் காய்கறி முதல் சாப்பாடுவரை அனைத்துமே வீடு தேடி வந்துகொண்டிருக்கும்போது மருந்தை மட்டும் அனுமதிப்பதில் என்ன தப்பு? ஆன்லைனில் வாங்கும்போது தள்ளுபடி, கூடுதல் சலுகைகள் வேறு கிடைக்கின்றனவே என்று வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பு வாதங்களும் எவ்வளவு தூரம் உண்மை? ஓர் அலசல்:

மருந்து வணிகர்கள் கூற்று:

நேரடி மருந்து வணிகத்தில் 7.25 லட்சம் மருந்துக் கடைகள், 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள், ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி வணிகம் நடப்பதாக மருந்து வணிக அமைப்புகள் சொல்கின்றன. இவ்வளவு பெரிய வருமான-வேலைவாய்ப்பு தரும் கட்டமைப்பை ஆன்லைன் மருந்து வணிகம் சின்னாபின்னமாக்கிவிடும் என்பது மருந்து வணிக அமைப்புகளின் குற்றச்சாட்டு. மருந்துக் கடைகள் மட்டுமல்லாமல், மருந்து விற்பனைப் பிரதிநிதிகளின் வேலையையும் இது பாதிக்கும்.

எவ்வளவு தூரம் உண்மை?

மற்றத் துறைகளைப் போலவே பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆன்லைன் வர்த்தகத்தைத் திறந்துவிடுவதில் ஆபத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. ஏற்கெனவே நமக்குக் கிடைத்துவரும் அனுபவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. அது மட்டுமல்லாமல் மருந்து, மாத்திரைகள் உயிருடன் சம்பந்தப்பட்டவை என்பது கூடுதல் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

மருந்து வணிகர்கள் கூற்று:

மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்து அனுப்பி, ஆன்லைன் மூலம் மருந்தைப் பெறுவதில் பிரச்சினை ஏற்படும். எழுதப்பட்ட மருந்து கிறுக்கலாக உள்ளதால், ஆன்லைன் பார்மசிகளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.

எவ்வளவு தூரம் உண்மை?:

இது உண்மைதான். ஒரெழுத்து மாறுபாட்டில் நோய்க்கான மருந்து தலைகீழாக மாறலாம். வாடிக்கையாளருக்கும் மருந்துகளைப் பற்றிப் பெரிதாகத் தெரிந்திருக்காது.

அதேநேரம் மருத்துவர்கள் ஏன் கிறுக்கலாக எழுத வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பிட்ட மருத்துவர்களுடன், சில பார்மசிகள் புரிதலை வைத்துக்கொண்டுள்ளன. அதனால்தான் இந்த மருந்து நிச்சயமாக அங்கே கிடைக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மருந்துகளை மட்டும் மருத்துவர்கள் பரிந்துரைப்பதிலும் ரகசியப் புரிதல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடைசியாக, முறைப்படி பார்மசி படித்த எத்தனை பேர், பார்மசிகளில் வேலை பார்க்கிறார்கள் என்ற கேள்வியும் இதையொட்டி எழுகிறது.

மருந்து வணிகர்கள் கூற்று:

மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

எவ்வளவு தூரம் உண்மை?:

‘சார், ரெண்டு நாளா கழுத்து வலி, அதுக்கு ஏதாவது மாத்திரை இருக்கா?’, ‘காய்ச்சலுக்கு மருந்து இருக்குமா?’, ‘வயித்துக் கோளாறுக்கு மருந்து கொடுங்க அண்ணே…’ – இதுபோல டாக்டரிடம் போகாமல் நேரடியாக மருந்து வாங்கும் குரல்களைப் பெரும்பாலான பார்மசிகளில் கேட்கலாம். ‘பிரிஸ்கிரிப்ஷன் இல்லை’ என்பதால் யாருக்கும் மருந்து மறுக்கப்படுவதில்லை. மாறாக, கொடுத்த மாத்திரை வேலை செய்யவில்லை என, அடுத்த முறை பவர்ஃபுல் மாத்திரை வழங்கப்படுவது நிதர்சனம்.

‘ஷெட்யூல்டு டிரக்ஸ்’ பட்டியலில் வரும் மருந்துகள் ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டியவை. நம் உடலின் அவசியத் தேவைக்கு மட்டுமே, இந்த ஷெட்யூல்டு டிரக்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும். இது உண்மையிலேயே பின்பற்றப்படுகிறதா?

‘ஓவர் த கவுன்ட்டர்’ எனச் சகட்டு மேனிக்கு விற்கப்படும் தலைவலி, காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான மருந்துகள் மோசமான பின்விளைவுகளை – மருந்து அடிமைத்தனத்தை உருவாக்கக் கூடியவை.

அலோபதி மருந்துகளின் பக்கவிளைவுகளை, பின்விளைவுகளைப் பற்றி அறியாத பலரும், அப்போதைய தேவைக்காகக் கிடைக்கும் மாத்திரைகளை விழுங்குகிறார்கள். இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

தூக்க மாத்திரை போன்ற ஒரு சில மருந்துகள் மட்டுமே, மருத்துவர் பரிந்துரை இல்லாததால் பார்மசிகளில் மறுக்கப்படுகின்றன. மிகப் பெரிய – பாரம்பரிய நிறுவனங்கள் மட்டுமே மருந்துச்சீட்டு அடிப்படையில் மருந்து களைத் தருகின்றன. தெரிந்த பார்மசி என்றால், எந்த மருந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கக் கூடிய நிலைமை உள்ளது. அரசு மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் இதைக் கண்காணிக்கின்றனவா என்பதிலும் தெளிவில்லை.

மருந்து வணிகர்கள் கூற்று:

மருந்து வணிகம் கட்டுக்கோப்பானது. குறிப்பிட்ட ஒரு மாத்திரை அட்டையில் பிரச்சினை என்றால், உடனடியாகக் கண்டறிந்துவிட முடியும். அதற்குத் தீர்வு கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் நம்பகமானது அல்ல. காலாவதியான, போலியான மருந்துகள் அனுப்பப்படலாம்.

எவ்வளவு தூரம் உண்மை?:

இந்தக் குற்றச்சாட்டில் பாதி உண்மை, பாதி உண்மையில்லை.

ஆன்லைன் வர்த்தகத்தில் சில பொருட்கள் தள்ளுபடியில் கிடைப்பது உண்மை. அதேநேரம் தேவையில்லாத பொருள், பழுதான பொருட்கள் வந்து சேர்வதும் நடக்கிறது. அதைத் திரும்ப அனுப்புவதிலும், பணத்தைத் திரும்பப் பெறுவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

மற்றொரு புறம் காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள் தமிழகத்தில்தான் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தன. அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை இன்னும் இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள் முழுமையாக இல்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

முக்கியமான ஆபத்து

அதேநேரம் ஆன்லைன் மருந்து விற்பனை வந்தால், மருந்துக் கடைகள் குறைந்துவிடும், அவசரத் தேவைக்குக்கூடப் பக்கத்தில் இருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்க முடியாத நிலை ஏற்படும்.

நம் உயிரும் உடலும் சம்பந்தப்பட்ட வணிகம் என்பது மட்டுமல்லாமல், ஆன்லைன் மருந்து விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவில் ஈடுபட்டிருப்பதால் எச்சரிக்கையோடு சிந்திக்க வேண்டியிருக்கிறது. மருந்து விற்பனையைப் பன்னாட்டு வணிகத்துக்குத் திறந்துவிடுவது அத்துறை சார்ந்த வேலைவாய்ப்பையும் பெருமளவு பாதிக்கலாம்.

அதேநேரம் சாதாரணப் பார்மசிகளில் ஏற்படும் பிரச்சினைகளை ஆன்லைன் விற்பனை தடுத்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. தற்போது நடைமுறையில் உள்ள பார்மசிகள், மருந்து விற்பனை நடைமுறைகள், மருத்துவர்களை வெளிப்படையாகச் செயல்பட வைக்கவும், ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்த அம்சங்கள் சார்ந்துதான்.

Leave a Reply