shadow

job_2081989hவேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தொடர்ந்து பெற உறுதிமொழி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்று மற்றும் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி விளக்குகிறார்.

வேறு மாவட்டத்துக்கு வேலைவாய்ப்பு பதிவை மாற்றம் செய்யும்போது பதிவு மூப்பு பாதிக்குமா?

இல்லை. பணி சூழல் காரணமாக ஓர் இடத்திலிருந்து வேறு இடம் அல்லது மாவட்டத்துக்கு செல்வது இயல்பான ஒன்று. எனவே, அவ்வாறு மாற்றம் செய்தாலும் பதிவு மூப்பு எதுவும் பாதிக்காது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தொடர்ந்து பெற சுய உறுதிமொழி ஆவணம் அளிப்பது அவசியமா?

ஆம். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஏப்ரல் மாதம் சுய உறுதிமொழி ஆவணம் வழங்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் வழங்க தவறினால், சம்பந்தப்பட்ட ஆண்டிலிருந்து உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும். சுய உறுதிமொழி ஆவண விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை அசல் மற்றும் நகல், நடப்பு வங்கி கணக்கு புத்தக அசல் மற்றும் நகல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு ஆகியவற்றை இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி?

அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்யும் சிரமத்தை குறைக்கும் வகையில் ஆன்லைன் முறையில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் பதிவு ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள். பின், கிரியேட் நியூ யூசர் ஐடி (create new user ID) என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின், தங்களது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து புதிய யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (User Id and Password) உருவாக்கி கொள்ள வேண்டும். பின், கண்டினியூ (Continue) தர வேண்டும். அதையடுத்து தாயின் பெயர், சாதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து, காண்டாக்ட் டீடெய்ல்ஸ் (Contact details) எனும் முகவரியில் கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அனைத்தும் பதிவு செய்த பின் ஓகே (ok) என்பதை கிளிக் செய்தால் பதிவு எண் வழங்கப்படும். அந்த பதிவை நாம் பிரிண்ட் (print) எடுத்துக் கொள்ளலாம். பதிவுதாரரின் யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை தவறாமல் குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை புதுப்பித்தல் அல்லது கூடுதல் பதிவுக்கு இது அவசியமாகும்.

Leave a Reply