shadow

ok kanmani

மவுஸ் பிடிக்க தெரிந்தவர்கள் எல்லாம் தற்போது விமர்சனம் எழுத தொடங்கிவிட்டார்கள். அவர்களை எல்லாம் விமர்சனம் எழுத பெரிய பத்திரிகையாளர்கள் விமர்சனம் எழுத அனுமதிக்க கூடாது என சமீபத்தில் பேசிய சுஹாசினியின் அதிகபிரசங்கித்தனமான பேச்சுக்கு இந்த படத்தை கிழிகிழி என கிழிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் பலரிடம் இருந்தது. ஆனால் படம் பார்க்கும்போது ஒரு மைனஸ் கூட படத்தில் தெரியவில்லை. மணிரத்னம் என்ற மகாமேதையின் திறமைக்கு மதிப்பு கொடுத்து சுஹாசினியின் பேச்சினை உதாசினப்படுத்திவிட்டு இந்த விமர்சனத்தை எழுதுகிறோம்.

ராவணன், கடல் ஆகிய இரண்டு படங்களிலும் சறுக்கிய மணிரத்னம், தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் இதில் இறக்கி தன்னை மீண்டும் ஒரு வெற்றி இயக்குனராக மெய்ப்பிக்க வேண்டும் என்ற வெறியுடன் இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘ஓகே கண்மணி. அவருடைய உழைப்பும் வீண்போகவில்லை என்பதையே படத்தின் ரிசல்ட் காட்டுகின்றது. இளையதலைமுறை இயக்குனர்களுடன் போட்டி போட முடியாமல் ஒதுங்கிய பல சீனியர் இயக்குனர்களின் வரிசையில் மணிரத்னமும் சேர்ந்து விடுவாரோ என்ற பயத்தை இந்த படத்தில் போக்கிவிட்டார் மணிரத்னம்.

திருமணத்தில் நம்பிக்கை இல்லாத நித்யாமேனன், தற்செயலாக துல்கார் சல்மானை பார்த்து பழகுகிறார். பழகும்போதுதான் தெரிகிறது அவருக்கும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பது. பின்னர் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பழகி  பின்னர் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ முடிவு செய்கின்றனர். ஆறு மாதத்தில் இருவரும் அவரவர் வேலையின் காரணமாக பாரீஸ் மற்றும் நியூயார்க் செல்லவிருக்கும் நிலையில் அதுவரை சேர்ந்து வாழ முடிவு செய்கின்றனர்.  சரியாக ஆறுமாதங்கள் கழித்து பிரிய நினைக்கும்போது இருவருக்குமே பிரிய மனமில்லை. ஆனால் வேலை காரணமாக பிரிய வேண்டிய கட்டாய நிலை. அந்த சமயத்தில் ஏற்படும் ஒரு திருப்பம்தான் கிளைமாக்ஸ்.

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பாக நடித்துள்ளதால் மனதை கவர்கிறார். வசன உச்சரிப்பும் தந்தையை போல தெளிவாக உள்ளது. ஏற்கனவே ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டின் நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். சின்ன சின்ன முகபாவங்களையும் வெகு அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். மொத்தத்தில் மணிரத்னம் இவரை நன்றாக வேலை வாங்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

நித்யா மேனனை இதுவரை தமிழ் சினிமா ஏன் பயன்படுத்தவில்லை என்றே இந்த படத்தை பார்த்த பின்னர் ஆதங்கப்பட வேண்டியதுள்ளது. கண்களாலே கவிதை பேசும் நடிப்பு திறமையை இவ்வளவு நாள் எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்றே தெரியவில்லை. வெகு இயல்பான நடிப்பு. தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி. பாடல் காட்சிகளில் இளமையான துள்ளல் என நித்யாமேனன் மிக அழகாக ஸ்கோர் செய்துள்ளார்.

படத்தின் முக்கிய கேரக்டர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் லீலா சாம்சன். கிளைமாக்ஸில் ஏற்படும் அதிரடி திருப்பத்திற்கு இந்த கேரக்டர்கள் தான் காரணம். இருவருமே மிகவும் இயல்பாக அந்த கேரக்டர்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்துவந்த ரம்யாவுக்கும் இந்த படத்தில் நல்ல கேரக்டர்தான்.

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கூற வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் மணிரத்னம் படம் என்றால் கூடுதல் கவனத்துடன் இசையமைக்கும் ரஹ்மான் இந்த படத்திலும் வெகு அருமையாக இசையமைத்துள்ளார். மெண்டல் மனதில் பாடல் உள்பட அனைத்து பாடல்களும் மிக அருமை. பாடல்களின் காட்சி அமைப்பும், லோகேஷன்களும் மிக மிக அருமை

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே’ படத்தில் அற்புதமாக பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்த படத்தில் மீண்டும் அவருடன் கைகோர்த்துள்ளார். காட்சி அமைப்புக்கேற்ற லைட்டிங் அமைத்து அவர் ஒளிப்பதிவு செய்துள்ள விதம் மிக அருமை. பொதுவாக மணிரத்னம் படம் என்றாலே இருட்டு அதிகமாக இருக்கும் என்ற குற்றச்சாட்டு இருக்கும். ஆனால் இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம் அந்த குற்றச்சாட்டை போக்கியுள்ளார்.

மொத்தத்தில் ஓகே கண்மணி ஓகேதான்.

Leave a Reply