சென்னை அசோக் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டில் 3 பேர் கழுத்தை அறுத்து பயங்கரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுபட்டுள்ளது.

கனிமவளத்துறையின் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுப்பெற்ற எஸ்.சரவணன் என்ற டாமின் சரவணன். இவர், மனைவி கஸ்தூரி, வேலைக்கார பெண் அன்பரசி ஆகியோருடன் சென்னை அசோக்நகரில் வசித்து வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி இவர்கள் மூன்று பேரும் மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்கள்.

இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவர்களால் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாததால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் வேளச்சேரியை சேர்ந்த முகமது யாசின், அசோக்நகரை சேர்ந்த உதயகுமார், போரூரை சேர்ந்த மோகன்தாஸ், அவரது மனைவி சத்திய பாமா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

வழக்கு சென்னையில் உள்ள விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரும் குற்றவாளி என்று தீர்மானித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தண்டனை பெற்ற 4 பேரும் அப்பீல் செய்தார்கள். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் முன்பு விசாரித்தார்கள். அப்போது, தண்டனை பெற்றவர்கள் சார்பில் வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதம் செய்தார்கள்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து மறுவிசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. இணை இயக்குனருக்கு உத்தரவிடுகிறோம்.

இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்களை தவிர, இந்த வழக்கில் மேலும் தொடர்புள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கிறோம். இந்த 4 பேரும் ரூ.25 ஆயிரம் உத்தரவாதமும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் விசாரணைக் கோர்ட்டில் வழங்கி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை 4 பேரும் விசாரணைக் கோர்ட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலையில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும். சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு 4 பேரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.

Leave a Reply