shadow

jayalalithaசென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஏழு மணிக்கு நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் சட்டமன்ற குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்..

சுமார் 10 நிமிடங்களே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்து அதற்கான கடிதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய 5 அ.தி.மு.க. அமைச்சர்கள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி ஜெயலலிதாவிடம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்தார்

அதன்பின்னர் இன்று காலை 8 மணிக்கு கிண்டி ராஜ் பவன் சென்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவரிடம் அளித்தார். பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்ற கவர்னர், தமிழக அமைச்சரவையை விரைவில் அமைக்கும்படி ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புதிய அமைச்சரவை பட்டியலை அளிக்குமாறும் கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply