p46b

மிகவேகமாக சீறிப் பாய்கிறது கார். அந்த நேரத்தில் தனியாக ரோட்டில் நடந்து வரும் ஹீரோ, திடீரென காரின் ஒலியைக் கேட்டு, தூக்கத்தில் தள்ளப்பட்ட நிலையில் கீழே விழுகிறார். சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில், ‘நார்கோலெப்ஸி’ என்ற வினோதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஹீரோ, முக்கியமான கட்டங்களில் தூங்கி விழும் காட்சிகள் திரை அரங்கையே திடுக்கிடவைக்கின்றன. படத்திலேயே இப்படியென்றால், நிஜத்தில் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை!?

‘நார்கோலெப்ஸி’ என்ற இந்த அரிய வகைக் குறைபாட்டைப் பற்றியும், அதற்கான சிகிச்சைகளையும் தெரிந்துகொள்ள, தூக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கான சிறப்பு மருத்துவரான என்.ராமகிருஷ்ணனை சந்தித்தோம்.

‘மூளையில் ஹைபோகிரெடின் (ஆரக்சின் என்றும் அழைக்கப்படும்) என்ற ரசாயனத்தின் சுரப்பு குறைவதால்  ‘நார்கோலெப்ஸி’ ஏற்படும். இது பரம்பரை வியாதியாக வருவதற்கு மிகக் குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் 10 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். சிலருக்கு 50 வயதுக்கு பிறகும்கூட வரலாம். ஏன் இந்த ரசாயனக் குறைபாடு ஏற்படுகிறது என்பதைக் கணிக்கவே முடியாது. நார்கோலெப்ஸி உள்ளவர்களுக்கு, பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாகத் தூக்கம் வரும். அப்படி தூக்கம் வரும்போது, தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தூங்கிவிடுவார்கள். பொதுவாக, இது வெறும் தூக்கம்தான் என்று பலரும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் இது ‘நார்கோலெப்ஸி’தானா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த குறைபாட்டை அறிந்துகொள்ள சில அறிகுறிகள்…

  பள்ளியிலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ கட்டுப்படுத்த முடியாதபடி தூக்கம் ஏற்படும்போது, அவர்கள் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போய்விடுவார்கள்.

  மிக அதிக உற்சாகமோ, கோபமோ, சோகமோ ஏற்படும்போது, உடனே, அவர்களின் உடல் தசைகள் துவண்டுவிடும். அப்போதே, அந்த இடத்திலேயே தூங்கிவிடுவார்கள். கேடாப்லெக்ஸி (cataplexy) என்று இதை அழைப்போம்.

  தன்னைச் சுற்றி நடப்பது எல்லாம் தெளிவாகத் தெரியும். ஆனால் அவரால் பேசவோ, உடலை அசைக்கவோ முடியாது. இது எவ்வளவு நேரம் நீடிக்கும் என்றும் சொல்ல முடியாது. இதை ‘ஸ்லீப் பேராலிசிஸ்’ (sleep paralysis) என்போம்.  

  தூக்கம் வருவதற்கு முன்பு கண் முன் ஏதோ ஒரு பயங்கரமான காட்சி தோன்றும். பயத்தில் அப்படியே தூங்கிவிடுவார்கள். இதை ‘ஹிப்னோகாகிக் ஹாலுசினேஷன்’ (hypnagogic hallucinations) என்போம்.

  சிலர் தூங்கத் தொடங்கினால் ஆறேழு வாரங்கள் வரை தூங்கிக்கொண்டே இருப்பார்கள். எழுப்பவே முடியாது. அவர்களாக எழுந்தால்தான் உண்டு. பசிக்கும்போது தானாக எழுந்து சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் தூங்கத் தொடங்கிவிடுவர். இதுபோன்ற மெகா தூக்கம் உடையவர்கள் உலகிலேயே மிக மிக அரிதாகத்தான் காணப்படுவர்.  

இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இந்தப் பிரச்னைக்கு தீர்வு உள்ளது. டாக்டர் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தூங்கும் பாதிப்பைக் குறைக்கலாமே தவிர, இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. வாழ்நாள் முழுவதும் டாக்டர்கள் தரும் மாத்திரைகளையும், வாழ்க்கைமுறை விதிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

இவர்கள், வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகள், அபாயகரமான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்” என்ற டாக்டர் ராமகிருஷ்ணன், நார்கோலெப்ஸி குறைபாடு உள்ளவர்களுக்கு நடத்தப்படும் சில ஆய்வுகள் பற்றியும் விவரித்தார்.

”பாலிசோம்னோகிராம் (polysonogram) என்கிற முறைப்படி தூங்கும்போது அவர்களின் மூளையின் அலைத் தன்மை, மூளையின் செயல்பாடு, உடல் தசைகளின் செயல்பாடு, வேறு ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா போன்றவை கண்டறியப்படுகிறது. மல்டிபிள் ஸ்லீப் லேடன்சி டெஸ்ட் (multiple sleep latency) என்ற ஆய்வில், பாதிக்கப்பட்டவரை 8, 10, 12 என இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 முதல் 30 நிமிடங்கள் வரை தூங்கவைப்பார்கள். சாதாரண மனிதர்களால் அவ்வாறு தூங்க இயலாது. ஆனால், இந்தக் குறைபாடு உள்ளவர்கள் ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றுவிடுவார்கள். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தூக்கத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரைகளைச் சரியாக உட்கொண்டு வந்தாலே அடிக்கடி தூக்கம் ஏற்படுவதைக் கட்டுபடுத்தலாம். மேலும், அவர்கள் தினமும் பகல் நேரங்களில் தூக்கம் வருகிறதோ இல்லையோ, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் வரை தூங்கப் பழக வேண்டும். இந்தப் பழக்கம் நாளடைவில் அளவுக்கு அதிகமான தூக்கத்தை குறைக்கக்கூடும். அவர்களுக்கும் இது பெரிய பிரச்னையாக தெரியாமல் பழகிவிடும்”

இந்தியாவில் குறைவுதான்!

உலக அளவில் ஜப்பானில்தான் இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம். இந்தியாவில் இந்தக் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நார்கோலெப்ஸி என்பது மாற்ற முடியாத பெரும் நோய் அல்ல.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *