shadow

முடிவில் மாற்றம் இல்லை, இனி அரசியலே வேண்டாம்: நாஞ்சில் சம்பத்

இனி அரசியல் கட்சிகள் வேண்டாம் என்று நான் எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என இன்று நாஞ்சில் சம்பத் உறுதிபட இன்று மீண்டும் ஒரு திருமண நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

திராவிடம் மற்றும் அண்ணா பெயர் கட்சியின் பெயரில் இல்லை என்ற காரணத்தை காட்டி டிடிவி தினகரன் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய நாஞ்சில் சம்பத் திருப்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நான் விலகுவதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருந்ததாக, டி.டி.வி. தினகரன் கூறியிருப்பது என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. என்னுடைய உள்ளத்தை, நேர்மையான நடவடிக்கைகளை அவர் நம்பவில்லையா என்ற கேள்வி எழுகிறது? ஆகவே அந்த குற்றச்சாட்டு அவருக்கே போய்ச்சேர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் தமிழகம் மிகத்துணிச்சலாக முடிவு எடுக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தமிழக முதல்வர் தான், பொதுப்பணித்துறைக்கும் பொறுப்பு. முதல்வர் பதவியை ராஜினமா செய்து இந்தியாவின் கவனத்தை அவர் கவர வேண்டும். அப்போதுதான் கர்நாடகத்தில் இருக்கிறவர்கள், தமிழகம் உணர்வு நிலையின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள்.

கர்நாடகத்தில் நடைபெறும் தேர்தலை கணக்கில் கொண்டு தள்ளிவைப்பதும், கொள்ளிவைப்பதும் காலங்காலமாக டெல்லியில் யார் இருந்தாலும் ஆடுகிற பொம்மலாட்டம். அந்த பொம்மலாட்டத்தை அனுமதிக்க முடியாது. அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று பிரதமர் வீட்டு முன்பு தேவைப்பட்டால் ஒரு மறியல் போரைக் கூட நடத்த தயராக வேண்டும்.

எந்த கட்சி அழைப்பையும் ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. இனி இலக்கியவீதியில் பயணம் செய்ய உள்ளேன். இளையதலைமுறைக்கு பேச்சுப்பயிற்சி அளிக்க முடிவெடுத்துவிட்டேன். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு மத்தியில் வானம் எட்டும் தூரம் தான், வாழ்க்கை சவால் அதனை சந்தியுங்கள் என்று பேசுவதற்கு முடிவெடுத்துள்ளேன். இந்த ஆண்டுக்குள் 12 புத்தகங்கள் வெளியிட வேண்டும். இனி அரசியல் கட்சிகள் வேண்டாம் என, எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

அதிமுகவின் எதிர்காலம் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. ஆதாயச்சூதாடிகளின் கட்சியாக அந்தக்கட்சி மாறிவிட்டது. அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கார். டெல்லியில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் மதிக்கத்தகுந்த போராட்டம். எல்லா இடங்களிலும் பாஜகவுக்கு எதிரான ஒரு அலை வீசத்தொடங்கிவிட்டது. மக்களை பாஜக பழிவாங்குகிறது. நாட்டில் ஏழை மக்களின் வாழ்வை மிகப்பெரிய பின்னடவை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. வாக்குச்சீட்டு முறை வாக்காளனுக்கும், களத்தில் போராடுபவர்களுக்கு நம்பக்த்தன்மையை தரும்

இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்

Leave a Reply