மோடி மனைவிக்கு பாஸ்போர்ட் மறுப்பு. மோடி தலையிடுவாரா?
modi with wife
பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு சிறுவயதிலேயே ஜசோதாபென் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும் பின்னர் அவர் மனைவியை பல ஆண்டுகளாக பிரிந்து இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் குஜராத்தின் வட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தனது சகோதரர் அசோக் மோடி குடும்பத்துடன் வசித்து வரும் மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்கள், குடும்ப நண்பர்களைச்  சந்திக்க செல்வதற்காக ஜசோதாபென்  பாஸ்போர்ட்டுக்காக சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது.

இது பற்றி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கான் கூறுகையில், “நாங்கள் அந்த விண்ணப்பத்தை ஏற்கவில்லை. ஏனெனில் அவர் திருமண சான்றிதழையோ, வாழ்க்கைத் துணைவருடனான கூட்டு பிரமாண பத்திரத்தையோ இணைத்து விண்ணப்பிக்கவில்லை. திருமணமான பெண்களை பொறுத்தமட்டில், பாஸ்போர்ட்  பெறுவதற்கு இவ்விரு ஆவணங்களில் ஒன்று அவசியம்” என தெரிவித்தார்.

பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்து ஜசோதாபென்னின் சகோதரர் அசோக் மோடி கருத்து தெரிவிக்கையில், “பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான சட்டப்பூர்வ வாய்ப்புகள் குறித்து எனது சகோதரி பரிசீலிப்பார்” என்று கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் மோடி தலையிடுவாரா? என்பது குறித்து எந்தவித தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *