9தமிழக அரசின் சார்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முதல்வரின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசும்போது எதிர்க்கட்சியினர்களை கழுதை , எருமை கதை சொல்லி மறைமுகமாக சாடினார். மேலும் முதல்வர் தனது பேச்சில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஸ்ரீரங்கத்தில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியவைகளில் ஒருசில பகுதிகள்:
“தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்னையாக விளங்கும் காவேரி நதிநீர்ப் பிரச்னையில் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை உச்ச நீதிமன்றம் மூலம் போராடி மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து தமிழக மக்களின் உரிமையை நான் நிலைநாட்டியுள்ளேன். இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஏதுவாக, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பொறுத்த வரையில், எனது உத்தரவின் பேரில் தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்களையடுத்து, தமிழகத்திற்கு உரிய நியாயமான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினால் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தும் வகையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் மூன்று பேர் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்படவேண்டும்.

தமிழ்நாடு மற்றும் கேரளா சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையும் மத்திய நீர்வளக் குழுமம் சார்பில் அதன் பிரதிநிதியை நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன், அணையின் நீர் மட்டத்தை முதற் கட்டமாக 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது மூன்று ஆண்டு கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முன்னிறுத்தியும், செய்யப் போகும் சாதனைகளை எடுத்துக் கூறியும் மக்களவைத் தேர்தலில் உங்களிடம் வாக்கு சேகரித்தேன். ஆனால், எதிரணியினரோ பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். என்னை வசை பாடினர். என் மீதும், எனது அரசின் மீதும் புழுதி வாரி இறைத்தனர். இறுதியில் எனக்கும், மக்களாகிய உங்களுக்கும் இடையே உள்ள அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை எதிரணியினரை மண்ணைக் கவ்வச் செய்தன.

முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், “கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?” என்ற வினா எழுந்தது. உடனே அரச சபையை கூட்டி அனைவரிடமும் இதற்கான விடையை வினவினார் மன்னர். யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு வெளியிலிருந்து ஒரு முனிவர் வரவழைக்கப்பட்டார். அந்த முனிவரிடம், “கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று வினவினார் மன்னர். அதற்கு அந்த முனிவர், “கடவுள் கூப்பிடுகிற தூரத்தில் தான் இருக்கிறார்” என்று பதில் அளித்தார். “அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே வந்து விடுவார் அல்லவா?” என்று கேட்டார் மன்னர்.

அதற்கு அந்த முனிவர், “எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது” என்றார். “புரியும்படி கூறுங்கள்” என்று அந்த மன்னர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதில் அளித்த முனிவர், “துரியோதனன் சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்ட போது, “வைகுண்ட வாசா! காப்பாற்று” என்று கிருஷ்ணரை அழைத்தாள் திரௌபதி. ஆனால் கிருஷ்ணர் வரவில்லை. “துவராகை நாயகனே!” என்னை காப்பாற்று என்று அழைத்தாள் திரௌபதி. அப்போதும் கிருஷ்ணன் வரவில்லை. “இதயத்தில் இருப்பவனே!” என்று கடைசியாக அழைத்தாள் திரௌபதி. உடனே பகவான் கிருஷ்ணர் தோன்றி திரௌபதியின் மானத்தைக் காத்தார். கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்கு தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார். எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல் கடவுளுக்கு கேட்கும். உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால் உடனே வந்து அருள் பாலிப்பார்” என மன்னருக்கு விளக்கம் அளித்தார் அந்த முனிவர்.

கடவுளைப் போலத் தான் மக்களும். அதனால்தான், “மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்றார் பேரறிஞர் அண்ணா. அப்படியானால், மக்களாகிய நீங்கள் தானே மகேசன்? மகேசனாகிய மக்கள் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறீர்கள். உங்கள் இதயங்களிலும் நான் என்றென்றும் குடிகொண்டு இருக்கிறேன். அதனால் தான், மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு அமோகமான வெற்றியை நீங்கள் அளித்தீர்கள். மூன்றாண்டு கால ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். தமிழக மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க அயராது பாடுபடுவேன்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எவ்வித குறிக்கோளுமின்றி எனது அரசின் மீது புறஞ்சொல்லி திரிவதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, உண்மைக்கு மாறான வகையில், நியாயமற்ற முறையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எதிரணிகளுக்கு தக்கப் பாடம் புகட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறை சொல்லி திரிபவர்கள் என்றவுடன் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. மன்னரிடம் பரிசு கேட்டு இரு புலவர்கள் சேர்ந்து வந்தனர். மன்னர் இருவரையும் தனித் தனியாக அழைத்துப் பேசினார்.

முதல் புலவரிடம், “உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்? என்று கேட்டார் மன்னர். அதற்கு முதல் புலவர், “அவர் ஒரு மக்கு. எருமை” என்று கூறினார். இதைக் கேட்ட மன்னர், “நன்றி புலவரே, நாளை காலை அரசவைக்கு வாருங்கள்” என்று கூறினார். பின்னர் இரண்டாவது புலவரை அழைத்து, “உங்களோடு வந்திருக்கும் புலவர் எப்படிப்பட்டவர்?” என்று மன்னர் கேட்டார். அதற்கு இரண்டாவது புலவர், “அவர் ஒரு மடையர், கழுதை” என்றார். இதைக் கேட்ட மன்னர், “நன்றி புலவரே. நாளை காலை அரச சபைக்கு வாருங்கள்” என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார். மறுநாள் சபை கூடியது. இரு புலவர்களும் வந்து காத்திருந்தனர்.

“புலவர்களே, உங்களில் ஒருவரை மற்றவர் எருமை என்றும், கழுதை என்றும் நீங்கள் சொன்னீர்கள். எருமைக்கு பரிசு கொடுத்தால் கழுதைக்கு கோபம் வரும். கழுதைக்குப் பரிசு கொடுத்தால் எருமைக்கு கோபம் வரும். நானோ மனிதர்களில் சிறந்த புலவர்களுக்குப் பரிசு தருபவன். இங்கே எருமைக்கும், கழுதைக்கும் வேலையில்லை” என்று கூறினார் மன்னர். இந்த மக்களவைத் தேர்தலில் நீங்கள் அளித்த தீர்ப்பு இந்த மன்னர் கூறிய தீர்ப்பு போல் அமைந்துள்ளது. அதாவது, கடமையைச் செய்பவர்களை, உரிமையைத் தட்டிக் கேட்பவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்துள்ளீர்” என்று பேசினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *