shadow

ரேசன் கார்டு, வங்கி புத்தகம் இல்லாவிட்டாலும் நிவாரண தொகை உண்டு. தமிழக அரசு அறிவிப்பு
ration card
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் வெள்ள நிவாரண உதவி பெற ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் தகவலை மட்டும் கணக்கெடுக்கும் அதிகாரியிடம் தெரிவித்தால் போதும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் பெரும்பாலானோர்களின் குடும்ப அட்டைகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் அடித்து செல்லப்பட்டதால் இந்த அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் நிவாரணம் பெறும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அளித்துள்ள தகவல் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, ”வெள்ள நிவாரண கணக்கெடுப்பு களப் பணியில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சென்னை மாவட்டத்தின் 10 வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பணிகளை மேற்பார்வையிட ஒரு சார் ஆட்சியர், 21 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 21 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது, பொது மக்கள் தங்களது குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். இவை சேதம் அடைந்திருந்தாலோ அல்லது அடித்து செல்லப்பட்டிருந்தாலோ தகவலை மட்டும் கணக்கெடுக்கும் அலுவலர்களிடம் தெரிவித்தால் போதும்.

பாதிக்கப்பட்டோருக்கு வங்கி சேமிப்பு கணக்கு இல்லாவிட்டால், தனியாக சேமிப்புக் கணக்கு தொடங்கப்படும். வீடுகள் பூட்டப்பட்டு இருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அந்த வீட்டினை மறுகணக்கீடு என குறிப்பார். பிறகு, மீண்டும் கணக்கீடு செய்யப்படும். சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் முழுமையான கணக்கீடு பணி மேற்கொள்ளப்படும். அதனால், வெள்ள நிவாரண கணக்கெடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”

இவ்வாறு சென்னை கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

English Summary: No issue to get flood relief fund if ration card damaged or lost said TN Government

Leave a Reply