shadow

இடைத்தேர்தலில் போட்டி இல்லை. தமாக தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு

jayalalitha and g.k.vasan speechதஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி உள்பட பல கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தேர்தலை புறக்கணித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடைபெறாமல் போன தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற இருக்கின்ற இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து கடந்த 5 நாட்களாக கட்சிக்குள் கருத்துக்களை கேட்டறிந்தோம்.

தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டு முதல் கடந்த 15 ஆண்டுகளில் 22 இடைத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இவை அனைத்திலும் ஆண்ட கட்சிகளே வெற்றியை பறித்திருக்கிறது என்பதையே கடந்த கால தேர்தல் முடிவுகள் தெரிவித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இடைத்தேர்தல் என்பதே ஆளும் கட்சிக்கான தேர்தல் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இந்த இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது என்பது ஒரு தேர்தல் சம்பிரதாயமாக இருக்கிறதே தவிர எவ்வளவு முயற்சி எடுத்தாலும் வெற்றி என்பது ஆளும் கட்சிக்கே என்பது எழுதப்படாத சரித்திரமாகியுள்ளது. தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு அரசியல் கட்சியின் தலையாய கடமையாகும்.

குறிப்பாக இடைத்தேர்தல் என்பது ஆளுகின்ற கட்சியினுடைய நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை கணிக்கின்ற தேர்தலாக இருக்கின்ற காலகட்டம் போய், இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றி பெற முடியும் என்ற நிலைப்பாடு நிலவி வருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் முறைக்கு பதிலாக வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் முறையே நிலவி வருவது மிகவும் வருத்தத்துக்குரியது.

தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வலுவான அரசியல் கட்சியாக வளர்ந்து வருகிறது. அதனை மேம்படுத்தும் அனைத்து விதமான நல்ல முயற்சிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இடைத்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் இருப்பது என்பது புதிதல்ல. இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு நடைபெற இருக்கின்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. த.மா.கா. தொண்டர்கள் மனசாட்சிப்படி ஓட்டுப் போடுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள் ளார்.

Leave a Reply