shadow

நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி முடிவு

மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்து கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிர்மலா தேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் மனு செய்துள்ளது.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலா தேவி மீதான வழக்கை அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆடியோ ஆதாரங்கள், கைப்பற்றப்பட்ட செல்போன்கள், மெமரி கார்டுகள் உள்ளிட்டவற்றை அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை அதிகாரி சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கில் எஸ்பி ராஜேஷ்வரி, தலைமையில் டிஎஸ்பி முத்து சங்கரலிங்கம் உள்ளிட்டோரைக் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக இன்று தேவாங்கர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எஸ்.பி ராஜேஸ்வரி தலைமையில் 5 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸார் நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 12 நாள் போலீஸ் காவல் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply