மேற்கிந்திய தீவுகள் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று ஓவல் மைதானத்தில் நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 81 ரன்களும், ரைடர் 47 ரன்களும், வில்லியம்ஸன் 47 ரன்களும், டெய்லர் 49 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகளின் பிராவோ இரண்டு விக்கெட்டுகளையும், ஹோல்டர், பெஸ்ட், நரின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் வால்ட்டன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் நான்காவது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் ரன் ஏது எடுக்காமல் ஆட்டமிழந்ததால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் 33.4 ஓவர்களில் மேற்கிந்திய திவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தபோது மழை வந்ததால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் டக்வொர்த் விதிகளின்படி நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி பரிதாப தோல்வி அடைந்தது. குப்தில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 8ஆம் தேதி ஹாமில்டன் நகரில் நடைபெறும். தற்போது நியூசிலாந்து அணி 2-1 என்ற விகிதத்தில் முன்னணியில் உள்ளது.

Leave a Reply