shadow

nerungivaaஆரோகணம் படத்தை அடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம். முதல் படத்தில் யோசித்த அளவுக்கு பாதிகூட இரண்டாவது படத்திற்காக அவர் யோசிக்கவில்லை என்பது காட்சியமைப்பில் தெரிகிறது. அவர் இன்னும் பிசியாக ‘சொல்வதெல்லாம் உண்மை’ டாக் ஷோவில் பிசியாக இருப்பதால் இந்த படத்தில் முழுமையாக கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது. எனவே இனிமேலாவது அவர் ஒரு வேளையை மட்டும் உருப்படியாக பார்த்தால் அவருக்கும் நல்லது, சினிமாவுக்கும் நல்லது.

ஹீரோ ஷபீர், ஏ.எல்.அழகப்பனின் லாரியில்  டிரைவராக வேலை செய்கிறார்.. ஷபீரின் அப்பா ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு பெட்ரோல் பங்கு உரிமையாளராக இருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் இந்தியா முழுவதும் திடீரென பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் இல்லாமல் அவதிப்படும் நிலையில் காரைக்காலில் இருந்து ஒரு தீவிரவாதி  ஏ.எல்.அழகப்பனிடம் 2000 லிட்டர் டீசல் கேட்கிறான். அதற்கு அவன் பெருந்தொகை ஒன்றை தருவதாகவும் கூறுகிறான். எனவே இதற்கு ஒப்புக்கொள்ளும் அழகப்பன் தன்னிடம் வேலை செய்யும் ஷபீரிடம் டீசல் வேண்டும் என்று கேட்க, அதற்கு ஷபீர் தன் அப்பா ஒய்.ஜி.மகேந்திரன் நடத்தும் பெட்ரோல் பங்கில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து தருகிறேன் என்று கூறுகிறார்.

அதன்படி ஷபீரும் பெட்ரோல் பங்கில் இருந்து 2000 லிட்டர் டீசலை அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து வருகிறார். வரும் வழியில் இந்த டீசல் தேச துரோகத்திற்கு பயன்படுத்த போகிறது என்ற தகவலை தெரிந்து கொள்ளும் ஷபீர், திடீரென டீசலை தர மறுக்கிறார். இதனால் கோபம் அடையும் அழகப்பன், உன்னையும் உன் அப்பாவையும் போலீசில் மாட்டிவிட்டுவிடுவேன் என்று பயமுறுத்துகிறார்.

இறுதியில் ஷபீர் டீசலை கொடுத்து தீவிரவாதி தப்பித்து செல்ல உதவினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் ஷபீர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பியாவிற்கு படத்தில் வேலையே இல்லை. ஏ.எல்.அழகப்பன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அப்பா வேடத்திற்கு பொருந்தி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். தம்பி ராமையா சிறிதளவே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

வினோத் பாரதி ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மேட்லி பிளூசின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் திரைப்படமான ஆரோகணத்தில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தன் இரண்டாவது படத்தில் மக்களின் கவனத்தை சற்று ஈர்க்காமல் கோட்டை விட்டிருக்கிறார். ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தை சுவாரஸ்யத்தோடு எடுத்திருந்தால் ஒருவேளை படம் நன்றாக வந்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ நெருங்க வில்லை.

Leave a Reply