shadow

everestநேபாளத்தில் கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்து பரிதாபத்தில் தவித்து வருகின்றனர். நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட இடங்களில் சர்வதேச மீட்புக்குழு உதவியுடன் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலநடுக்கத்தின் காரணமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனால் மலையேற்ற வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நிலநடுக்கத்தின் போது எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 22 பேர் பலியானதாலும், இன்னும் சிலர் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டதாக நேபாள அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண்ணும், மலையேற்றப் பயிற்சியாளருமான பச்சேந்திரி பால் கூறியதாவது:
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள், அதற்காக நேபாள அரசின் அனுமதியைப் பெறுவது, பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது உள்ளிட்டவற்றுக்காக லட்சக்கணக்கில் பணம் செலவிட வேண்டியுள்ளது.

இந்த நிலையில், நேபாள அரசின் இந்த முடிவு மலையேற்ற வீரர்களுக்கு, குறிப்பாக இந்திய வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்திருக்கும். இருப்பினும், வீரர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்த முடிவை நேபாள அரசு எடுத்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் மேற்கொண்டுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது முகாமுக்கு விரைவில் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்று பச்சேந்திரி பால் தெரிவித்தார்.

Leave a Reply