shadow

maggi noodlesநெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தமிழகம் உள்பட ஏறக்குறைய இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த தடை வெளிநாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாடும் மேகி நூடுல்சின் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  

மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயமும், சுவை கூட்டும் மோனோ சோடியம் குளூட்டோமேட் ரசாயனமும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. டெல்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸ் விற்பனையை தடை செய்துள்ள நிலையில் இந்திய ராணுவத்திலும் மேகி நூடுல்சை சாப்பிடக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சக செயலாளர் உத்தம் குமார் கூறும்போது ”இந்தியாவில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து நேபாள அரசும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. விரைவில் இது பற்றி விளக்க அறிக்கை வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார். நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேகி நூடுல்சை சாப்பிட்டால் நோய் அபாயம் ஏற்படும் என தெரிய வருவதால் உலகம் முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் தடை பரவி வருவதால் அந்நிறுவன நிர்வாகிகளும், ஊழியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply