தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் கோளாறு காரணமாக பல மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 95. ஜோகன்னஸ்பர்க்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உலக நாடுகளின் தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் அவரது உடல் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான அந்த 3 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வரிசையில் நின்று தங்கள் நாட்டு தலைவனுக்கு பிரியா விடை கொடுத்தனர்.

பொது மக்களின் 3 நாள் அஞ்சலி முடிவடைந்ததை அடுத்து நேற்று காலை அவரது உடலுக்கு பிரிட்டோரியாவில் உள்ள வாட்டர்லூப் விமானப்படை மைதானத்தில் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கு புரட்சிகர பாடல்களும், அஞ்சலி வாசகங்களும் ஒலிக்கப்பட்டன.
தென்னாப்பிரிக்க அதிபரும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான ஜேக்கப் ஜுமா இதில் கலந்து கொண்டு மண்டேலாவின் உடலை வழியனுப்பிவைத்தார். அப்போது அவர் தனது புகழுரையில், “நல்லபடியாக செல்லுங்கள், உங்கள் பங்கை நீங்கள் சிறப்பாக ஆற்றினீர்கள். நாங்கள் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருப்போம்” என்றார். வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து விடுதலை போராட்ட வீரராக ஆயுத போராட்டம் தொடங்கியதில் இருந்து 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தது வரையிலான மண்டேலாவின் வாழ்க்கையை அவர் நினைவுபடுத்தினார்.

இறுதியாக கூடியிருந்த அனைவரும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் போராட்ட வாசகமான ‘அமண்டலா’ (சக்தி) என்று குரல் எழுப்பினார்கள். பின்னர் அவரது உடல் தென்னாப்பிரிக்க விமானப்படை விமானம் மூலம் கேப் மாகாணத்தில் உள்ள மிதாதா நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த விமானத்துக்கு முன் ஜெட் போர் விமானங்கள் அணிவகுத்து சென்றன.

அங்கிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண்டேலாவின் சொந்த கிராமமான குனு என்ற பசுமை மலைகள் சூழ்ந்த கிராமத்திற்கு உடல் ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அந்த பகுதி மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

அந்த கிராமத்தில் உள்ள மண்டேலாவின் இல்லத்தில் அவரது உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராணுவ குண்டுகள் முழங்க, குடும்பத்தினரின் பாரம்பரிய சடங்குகளுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த இறுதி நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அமெரிக்க மக்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த ஜெஸ்ஸி ஜாக்சன், ஆப்பிரிக்க, கரீபியன் தலைவர்கள், ஈரான் துணை அதிபர் முகம்மது ஷரியத்மதாரி, லெசோதோஸ் 3-ம் மன்னர் லெட்சி, பிரான்சின் முன்னாள் பிரதமர்கள் லியோனல் ஜோஸ்பின், ஆலைன் ஜுப்பெ உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

Leave a Reply