shadow

11 ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டதாரியான நீலா சத்ய நாராயணாவுக்கு 22 வயதானபோது அவர் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. வீட்டில் பணத் தட்டுப்பாடும் நேரிட்டது. புனேயில் ஜவுளிப் பொருட்காட்சி ஒன்றில் மாலை நேரங்களில் சேல்ஸ் கேர்ளாக வேலைபார்த்தார். அவர் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பெண் தேர்தல் ஆணையர்.

“ஏழையின் கண்களில் இறைவனைக் காண்கிறேன்” என்கிறார் மும்பை, நாஸிக், புனே, மற்றும் டெல்லியில் கல்விகற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இந்தப் பெண்மணி. வசதியற்ற, வாழ்வாதாரம் அற்ற ஏழை மக்கள்பால் தனக்கு இரக்கமும் அன்பும் பாசமும் பொங்குவதாகக் கூறும் இவரது குடும்ப வாழ்க்கையே மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாகத்தான் அமைந்துள்ளது.

அந்தப் படிப்பினையை அறிய வேண்டுமென்றால் இவர் எழுதிய புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். “ONE FULL, ONE HALF” [ஒன் ஃபுல், ஒன் ஹாஃப் ] என்ற 113 பக்கத்திலான சுயசரிதை நூல் இது. உலகின் அனைத்து அன்னையர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த நூலில் அவர் தனது மகனைப் பற்றியும் தனது போராட்டங்களைப் பற்றியும் விவரித்திருக்கிறார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகள், ஒரு மகன். மூத்த பெண் ஒரு உளவியல் மருத்துவர். இரண்டாவது மகன் உளரீதியில் பாதிக்கப்பட்டவர். இப்போது அவருக்கு 30 வயது. முழுக்க முழுக்க அந்தப் பையனையே பின்னணியாக வைத்து இவர் உருவாக்கியுள்ள படைப்புதான் ஒன் ஃபுல், ஒன் ஹாஃப்.

நீலாவின் மகள் அனுராதா பிறந்து எட்டாண்டுகளுக்குப் பின்னர் பிறந்த மகன் சைத்தன்யா உளரீதியில் வளர்ச்சி குன்றிய குழந்தையாகவே இருந்ததால், ஒவ்வொரு மைல்கல்லை எட்டுவதிலும் பெரும் சிரமங்களும் தடுமாற்றங்களும் இருந்தன. ஆயினும் உயிர் பிழைத்து எழுந்து வருவதற்கான போராட்டத்தில் அவன் வெற்றிபெற்றான். பிறர் வியந்து பாராட்டத்தக்க விதத்தில் வெற்றி பெற்றான் என்று மிகுந்த பெருமிதத்துடன் நீலா தெரிவிக்கிறார்.

தனது நூலுக்கு அவர் வைத்துள்ள பெயருக்கான காரணத்தை அவர் சொல்லும்போது மனம் நெகிழ்கிறது. “ஒரு நாள் நானும் சைத்தன்யாவும் பேருந்தில் ஏறினோம். எங்களுக்கு பஸ் டிக்கெட் வாங்க முற்பட்ட சைத்தன்யா, கண்டக்டரிடம் ‘ஒன் ஃபுல், ஒன் ஹாஃப்’ என்றான். அவன் தோற்றத்தைப் பார்த்த நான், மெய்யாகவே அவன் அரை டிக்கெட்தானா என்று வியந்துபோனேன். ஒரு முற்றுப்பெறாத ஆள்தானா இவன்? நான் உண்மையாகவே முழுமையடைந்த ஒரு மனுஷியா? எல்லா விஷயங்களிலும் முழுமையானவளா? இயல்பான மக்கள் ஏன் தங்களை ‘ஃபுல்’ என்றும் சைத்தன்யா போன்றவர்களை ‘ஹாஃப்’ என்றும் கருதுகிறார்கள்? எங்கள் இருவருக்குமே பேருந்தில் பயணிப்பதற்கான தொலைவு ஒன்றேதான். டிக்கெட்டுகள் மட்டுமே வேறு என்ற எண்ணத்தில் ஊறிப்போனேன். என் சுயசரிதைக்கு அதையே தலைப்பாகக் கொடுத்தேன்” என்கிறார்.

சத்யநாராயணாவைச் சந்தித்ததுதான் தனது வாழ்க்கையில் மிகவும் சந்தோஷகரமான நிகழ்ச்சி என்கிறார் நீலா. ஐ.ஏ.எஸ். பரீட்சை முடிவுகளுக்காகக் காத்திருந்தபோது குடும்பத்தின் கஷ்டத்தைச் சமாளிக்கப் பொருட்காட்சியில் விற்பனைப் பெண்ணாக வேலை பர்த்தபோதுதான் ஆந்திர இளைஞர் சத்யநாராயணாவைச் சந்தித்தார். அந்தப் பொருட்காட்சியைச் சிறப்பாக நிர்வகித்து நடத்திய சத்யநாராயணாவிடம் மனதைப் பறிகொடுத்தார். அவரையே தமது வாழ்க்கைத் துணையாகவும் ஏற்றுக்கொண்டார்.

சைத்தன்யாவின் நிலைமையை எண்ணி தன் கணவரும் தானும் கொஞ்சம்கூட அலுப்போ சலிப்போ அடையாமல், அன்பாலும் பாசத்தினாலுமே சமாளிப்பதில் காட்டிய அக்கறையும், இதனை ஒரு பெரும் சவாலாகவே ஏற்றுப் போராடிய எதிர் நீச்சலும் தங்கள் வாழ்க்கையைப் புடம்போட்டுள்ளன என்கிறார் நீலா. பல நேரங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களும் சொல்லொனாத் துயர் தந்தன என்றாலும் அனைத்தையும் மீறி சைத்தன்யா பிழைத்தெழுந்து, நன்கு பேசவும் புரிந்துகொள்ளவும் செய்கிறான். இதற்காக ஆண்டவனுக்கு எத்தனை கோடி நன்றி கூறினாலும் போதாது என்கிறார் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.

“சைத்தன்யாவின் வாழ்க்கை உண்மையில் ஒரு அற்புதம். அவன் பிறந்தவுடன் அனைவருமே அவனை ‘வெறும் வெஜிடபிள்’ என்றனர்.. அவனால் நடக்கவே முடியாது என்றார்கள்; ஆனால் அவன் இன்று ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகள் பெறுகிறான். அவனை ஆராய்ச்சிக்கு உரிய ‘கினிபிக்’ அதாவது, மருத்துவத் துறையில் தேர்வாய்வுக்கு ஏற்றவன் என்று சில டாக்டர்கள் கூசாமல் சொன்னார்கள். தொடக்கத்தில் சைத்தன்யா எங்களுக்குப் பெரும் மனக்கவலையை ஏற்படுத்தவே செய்தான். ஆனால் இன்று அவன் குணமடைந்து, எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் மனநிறைவும் தந்திருக்கிறான்” என உணர்ச்சிப் பெருக்குடன் கூறுகிறார் நீலா.

சொந்த வாழ்வில் இத்தகைய சோகம் இருந்தாலும் தனது அரசுப் பணியைத் திறம்பட இவர் நிறைவேற்றிவந்தார் என்பதற்கு இவர் வகித்த பதவிகளும் பெற்ற விருதுகளுமே சாட்சி. இந்தி மொழி பேசாத எழுத்தாளர்களுக்கான இந்திய அரசாங்க விருது, கர்நாடகா மாநிலத்தின் மகாத்மா காந்தி விருது, ஆசீர்வாத் விருது, ஸ்த்ரீ சக்தி விருது, சென்ற ஆண்டில் வழங்கப்பட்ட மஹராஷ்டிரா அரசின் ஸ்த்ரீ கௌரவ் விருது, மும்பையில் ஃபிக்கியின் [FICCI] கோல்டன் மகாராஷ்ட்ரா விருது என்று பல விருதுகளை வென்றுள்ளார். நாக்பூரில் துணை கலெக்டர், பிவண்டியில் ஸப் டிவிஷனல் அதிகாரி, தானேயில் அடிஷனல் கலெக்டர், தானே கலெக்டர் என்று பல பதவிகளை வகித்துள்ளார்.

சமுதாயத்தில் நலிவுற்றவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் பரம ஏழை மக்களுக்கெல்லாம், ஓசைப்படாமல் எத்தனையோ உதவிகளைச் செய்துவருகிறார்.

ஓய்வுபெற்ற பின் மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையர் பதவியை அலங்கரிக்கிறார் நீலா. மகாராஷ்டிராவின் முதலாவது பெண் தேர்தல் ஆணையராகப் பொறுப்பை ஏற்றுள்ள இவருக்கு, அரசியலில் கொஞசம்கூட ஆர்வமோ, ஈடுபாடோ, தொடர்போ கிடையாது.

ஆங்கிலம், இந்தி, மராட்டி ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை வாய்ந்தவர் நீலா. இந்தியிலும் மராட்டியிலும் 150க்கும் அதிகமான பாடல்களை எழுதி இசையமைத்திருக்கும் இவர் உண்மையிலேயே சகலகலாவல்லிதான்.

Leave a Reply