shadow

மதுவிலக்கு கொள்கையில் கருணாநிதியை தமிழக அரசு பின்பற்றுகிறது. சட்டசபையில் நத்தம் விஸ்வநாதன்

nathamமதுவிலக்கு அமல்படுத்துவது பற்றிய கொள்கையில் திமுக தலைவர் கருணாநிதியின் கருத்துப்படிதான் இந்த அரசு செயல்படுகிறது என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தமிழக சட்டமன்றத்தில் நேற்று பேசினார்.

மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய நத்தம் விஸ்வநாதன், “மதுவின் தீமை குறித்து மற்ற எல்லோரையும் விட முதல்வர் ஜெயலலிதா நன்கு அறிவார். ஆனால், மதுவிலக்கை இப்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை.

இதற்கு நான் பதிலளிப்பதை விட முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்ன பதிலை சொல்கிறேன். ‘கொளுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்திற்கிடையே கொளுத்தப்படாத கற்பூரமாக நம் மாநிலம் இருக்கிறது. எனவே இதைப்  பாதுகாக்க முடியாது. சுற்றியுள்ள மாநிலங்களில் அமல்படுத்தாத நிலையில், இங்கு மட்டும் அமல்படுத்தினால் இந்த மாநிலத்தின் வருமானம் மற்ற மாநிலங்களுக்கு போய்விடும். அதுமட்டுமல்லாமல் சமுதாய விரோதிகள் கள்ளச்சாராய பேர்வழிகள்தான். இதனால் ஆதாயம் அடைவார்கள்’ என்று அப்போது அவர் கூறியிருக்கிறார். அவருடைய கருத்தை ஏற்று இந்த அரசு செயல்படுவது போன்ற கருத்தை நத்தம் விஸ்வநாதன் மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இங்கு மதுவிலக்கு பற்றி குரல் கொடுக்கிறீர்கள். ஆனால்  மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் மதுவிலக்கை நீங்கள் கொண்டுவரவில்லை. அதுபற்றி நீங்கள் ஏதாவது பேசினீர்களா? தேசிய அளவில், சர்வதேச அளவில் உள்ள கட்சி என்று சொல்லும் நீங்கள் மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் மாறுபட்ட கொள்கையோடு செயல்படுகிறீர்கள்.  எனவே மதுவிலக்கு பற்றி பேச கம்யூனிஸ்ட்டுகளுக்கு தார்மிக உரிமை இல்லை” என்று பதிலளித்தார்.

Leave a Reply