shadow

புதுவை: நமசிவாயத்தை சமாதானப்படுத்த துணை முதல்வர் பதவியா?

namasivayamபுதுச்சேரி முதல்வர் பதவிக்காக நாராயணசாமி, நமசிவாயம் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய மூவர் கடும்போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் தலைமை நாராயணசாமியை முதல்வராக தேர்வு செய்தது. அவர் வரும் திங்கள் அன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் பதவி கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ள புதுவை காங்கிரஸ் தலைவர் நமசிவாயத்தை சமாதானப்படுத்த துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகின.

மேலும் சமீபத்தில் சோனியா காந்தியை நாராயணசாமியும், வி.வைத்திலிங்கமும் சந்தித்துப் பேசியதால் இந்த கருத்து உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இதுகுறித்து செய்தியாளர்களிடம் நமச்சிவாயம் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து புதுவை அரசியல் நிலவரம் குறித்து பேசினேன். வெகு விரைவில் புதுவை முதல்வராக நாராயணசாமி பதவி ஏற்பார். புதுச்சேரி காங்கிரஸுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று கூறினார்.

மேலும் அவர் கூறியபோது, “அமைச்சரவையில் இடம்பெறுவோர் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் சோனியா உள்ளார். அந்த அடிப்படையில் எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. சோனியாவுடன் பேசியபோது, அமைச்சர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் நபர்களையும் நான் முன்மொழியவில்லை. புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம். விரைவில் அமைச்சரவை பட்டியலுக்கு சோனியா காந்தி ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன். சோனியா காந்தி எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று நமச்சிவாயம் கூறினார்.

Leave a Reply