shadow

ராஜபக்சே மகனுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்தது ஏன்?

ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலை பார்வையிட தனிப் பார்வையாளராக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் இலங்கை பாராளுமன்றத்தின் எம்.பி.யுமான நமல் ராஜபக்சே சென்று இருந்தார். ரஷ்ய தேர்தல் முடிவடைந்ததையடுத்து மாஸ்கோ நகரில் இருந்து அமெரிக்கா செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். அமெரிக்கா செல்ல எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில் டிக்கெட் எடுத்துள்ளார். மேலும் அமெரிக்கா செல்வதற்காக விசாவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நமல் அமெரிக்கா வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் திடீரென தடை விதித்துள்ளதை அடுத்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது

தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள நமல் ராஜபக்ச,”மாஸ்கோவில் உள்ள எமிரேட்ஸ் ஏர் விமான நிறுவனத்தினர், என்னை ஹியூஸ்டன் செல்லும் விமானத்தில் ஏற்ற கூடாது என அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறினர். எதற்காக எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறப்படவில்லை. அமெரிக்காவிற்கு அதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது. எனது பெயர் அதற்கு காரணமாக இருக்காது, ஒருவேளை அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நான் இலங்கை எதிர்க்கட்சி உருப்பினர் என்பதாலா அல்லது நான் ரஷ்யாவில் இருந்து வருகிறேன் என்பதாலா என தெரியவில்லை, என கூறியுள்ளார்.

இதுகுறித்து நமல் ராஜபக்சேவின் அலுவலகத்தினர் கூறிய போது ” நமலுக்கு சரியான விசா இருந்தும் அமெரிக்காவிற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டனர். இது குறித்து மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிற்குள் நுழைய நமலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் கொழும்புக்கே திரும்ப திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Namal Rajapakse not allowed to US flight

Leave a Reply