shadow

LRG_20150911103811900158

நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் எழுந்தருளி காட்சியளித்த நாளை  நினைவு கூறும் வகையில், கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நாகை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த  நாயனார்.

சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் முதல் மீனை சி வனை நினைத்து கடலில் விட்டுவிடுவது அதிபத்த நாயனார் வழக்கம்.அதிபத்த நாயனாரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான்,சில  நாட்கள் அதிபத்த நாயனாரின் வலையில் மீன்கள் கிடைக்காமல் செய்தார். இதனால் அதிபத்தரின் குடும்பம் வறுமையில் வாடியது.சில நாட்கள்  கழித்து வறுமையில் வாடிய, அதிபத்த நாயனாரின் வலையில் நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் படி சிவபெருமான்  செய்துள்ளார்.  வறுமையில் வாடிய நிலையிலும் வலையில் சிக்கும் ஒரு மீனையும், இறைவனை நினைத்து கடலில் விட்டு, விட்டு வெறுங்கையுடன்,அதிபத்தர்  வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஏழ்மை நிலையில் வாடிய அதிபத்தரின் வலையில் ஒரு நாள் நவரத்தினங் களால் ஆன தங்கமீன் சிக்கியுள்ளது.தங்க மீனாயினும் தயங்காது,‘இது  அருட்கூத்தாடும் சிவபெருமானுக்கு உரியது’ என்று மகிழ்வோடு கடலில் விட்டுள்ளார் அதிபத்த நாயனார்.இவரின் மித மிஞ்சிய தீவிர பக்தியை  மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி காட்சியளித்தார். அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒருவராக  போற்றப்படும் அதிபத்த நாயனாருக்கு,சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில் நேற்று மதியம் நாகை நீலாயதாட்சி அம்மன்  கோவிலில், இடப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளினார். நம்பியார் நகர் கிராம மீனவர்கள் மேளதாளம்,மங்கள வாத்தியங்கள்  முழங்க,வான வேடிக்கையுடன் சிவபெருமானையும், அதிபத்த நாயனாரையும் நாகை புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். புதிய  கடற்கரையில் நம்பியார் நகர், ஆரியநாட்டு தெரு,சாமந்தான் பேட்டை கிராம மீனவர்கள் சீர்வரிசையுடன் வரவேற்றனர். புதிய கடற்கரைக்கு இடப  வாகனத்தில் வந்த சிவபெருமான் மற்றும் அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது.பின் அதிபத்த நாயனார் கட்டுமரத்தில்  சென்று  கடலில்  தங்கமீனை விடும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள்-சிவனடியார்கள் மனவேதனை: கோவிலில் இருந்து புறப்பட்ட ஆன்மிக ஊர்வலத்திற்கு முன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  வந்திருந்த 300 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள்,வேதபாராயணம்,சிவபுராணத்தை ஒலித்தப் படியே வந்தனர். ஆன்மிக ஊர்வலத்திற்கு முன்  குரவன், குரத்தி குத்தாட்ட  நிகழ்ச்சி நடைபெற்றது. சிவ பெருமான் எழுந்தருளிய ஊர்வலத்தில்,அருவருத்தக்க வகையில் நடந்த குத்தாட்ட நிகழ்ச்சி  சிவனடியார்களையும்,பக்தர்களையும் மனம் வேதனையடைய செய்தது.

Leave a Reply