shadow

‘நானும் ரெளடிதான்’ திரைவிமர்சனம்
naanum
சமீபத்தில் வெளிவந்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ முதல் விஜய்சேதுபதியின் சமீபத்திய படங்கள் பெரும் வெற்றியை தராத நிலையில், வெற்றி நாயகியான நயன்தாராவுடன் முதன்முதலாக இணைந்துள்ள இந்த படமாவது அவருக்கு கைகொடுக்குமா? என்பதை பார்ப்போம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ராதிகாவுக்கு தன் மகன் விஜய்சேதுபதியையும் போலீசாக்க வேண்டும் என்பது குறிக்கோள். ஆனால் விஜய்சேதுபதிக்கு போலீஸை விட ரெளடிதான் கெத்து என்பது சிறுவயதில் ஏற்பட்ட ஒரு எண்ணம் மனதில் ஆழமாக பதிந்துள்ளதால், ரெளடி போல பில்டப் செய்து வருகிறார். ஆர்.ஜே பாலாஜியும், விஜய்சேதுபதியும் ஒரு ஆபீஸ் போட்டு ரெளடி தொழில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீஸ்காரர் அழகம்பெருமாளால் ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட ரெளடி பார்த்திபன், அவருடைய வீட்டுக்கு பாம் பார்சல் ஒன்றை அனுப்புகிறார். இதில் அழகம்பெருமாள் மனைவி இறந்துவிட சிறுவயது நயன்தாராவின் காது செவிடாகிறது.

இந்நிலையில் காது கேட்காத நயன்தாரா தனது தந்தையை காணாமல் தேடிக்கொண்டு ராதிகாவின் போலீஸ் நிலையத்திற்கு வரும்போது தற்செயலாக சந்திக்கும் விஜய்சேதுபதி, அவரது தந்தையை கண்டுபிடிக்க உதவி செய்வதாக கூறுகிறார். ஆனால் நயனின் தந்தை இறந்துவிட்டதை அறிந்த விஜய்சேதுபதி, நயனிடம் அந்த விஷயத்தை கூறாமல் மறைக்கின்றார். ஆனால் ராதிகாவின் மூலம் தந்தை இறந்ததை தெரிந்து கொண்ட நயன், தனது தந்தையை கொலை செய்த பார்த்திபனை கொலை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இந்நிலையில் நயன்தாராவை காதலிப்பதாக விஜய்சேதுபதி கூற, தனது தந்தையை கொலை செய்தவனை பழிவாங்க உதவினால் காதலிப்பதாக நயன்தாரா கண்டிஷன் போடுகிறார். இதை ஏற்றுக்கொள்ளும் விஜய்சேதுபதி, தனது குழுவினர்களுடன் பார்த்திபனை கொலை செய்ய போடும் திட்டங்களும், அந்த திட்டங்கள் சொதப்பியும் வருகிறது. இறுதியில் நயன்தாரா, பார்த்திபனை கொலை செய்தாரா? விஜய்சேதுபதியை கைப்பிடித்தாரா? என்பதை இயக்குனர் கிளைமாக்ஸில் பல காமெடி காட்சிகளின் மூலம் முடிக்கின்றார்

இந்த படத்தின் உண்மையான ஹீரோ நயன்தாராதான். காது கேளாத காதம்பரியாக அபாரமாக நடித்துள்ளார். அப்பாவியான முகத்தையும், பழிவாங்கும் பயங்கரமான முகத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில் பார்த்திபனை கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும் கொலை செய்ய முடியாமல் அவர் திணறும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம்.

விஜய்சேதுபதியின் நடிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. அவருடைய பழைய படங்களில் உள்ள ஸ்டைலையே இதிலும் வெளிப்படுத்தியுள்ளார். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டினால்தான் பீல்டில் நிற்க முடியும் என்பதை அவருக்கு யாராவது அறிவுறுத்த வேண்டும்.

பார்த்திபன் ரெளடியா? அல்லது கோமாளியா? என்று சந்தேகிக்கும் வகையில் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. சீரியஸாகவும் இல்லாமல் காமெடியாகவும் இல்லாமல் பார்த்திபன், மன்சூர் அலிகான் இருவரது கேரக்டர்களையும் இயக்குனர் குழப்பியுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், படம் முழுவதையும் காமெடி வசனங்களால் மட்டுமே நிரப்பியுள்ளார். நயன்தாராவின் சீரியஸ் கேரக்டரை கூட ஆங்காங்கே நகைச்சுவை ஆக்கியுள்ளார். ஒருசில இடங்களில் வசனங்கள் ஆபாசம் தலைதூக்கி குடும்பத்துடன் வந்தவர்களை நெளிய வைக்கின்றது. ஆர்ஜே பாலாஜியின் காமெடி வசனங்கள் ரசிக்கும்படி உள்ளது. மற்றபடி படத்தில் அசர வைக்கும் காட்சியமைப்புகள், திருப்பங்கள், டுவிஸ்ட்டுகள் என எதுவுமே இல்லை.

அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். மொத்தத்தில் ‘நானும் ரெளடிதான்” வெறும் பில்டப் ரெளடிதான்

Leave a Reply