shadow

kal_2669109g

கைகளாலோ குச்சியைக் கொண்டோ தட்டுவதன்மூலம் காற்றை உள்வாங்கி ஒலியை உண்டாக்குவதுதான் இசைக் கருவிகளின் பொதுவான இயல்பு. ஆனால் வெற்றிடம் இல்லாத, காற்று உள்ளே புக முடியாத கல்தூண்களிலும், வட்டக்கல்லிலும் இசை வெளிப்படுவது ஓர் அதிசயம்.

ஆலயங்களின் அதிசயமாகக் கொண்டாடப்படும் இத்தகைய இசைத் தூண்கள், குறிப்பாக தென்னாட்டில் நெல்லையப்பர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோயில், சுசீந்திரம் போன்ற பல கோயில்களில் காணக் கிடைக்கின்றன.

சுசீந்திரம் கோயிலின் சிறப்பு

மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள கோயில் சுசீந்திரம். இக்கோயிலின் மூலவர் பெயர் ஸ்தாணுமாலயன். ஸ்தாணு என்பது சிவனைக் குறிக்கும். மால் என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அயன் என்பது பிரம்மனைக் குறிக்கும். மும்மூர்த்திகளையே லிங்க ரூபத்தில் மூலவராகக் கொண்டிருக்கும் சுசீந்திரம் கோயிலின் இன்னொரு தனிப் பெரும் சிறப்பு அங்கிருக்கும் இசைத் தூண்கள்.

தென்னாட்டு ஆலயங்கள் குறித்து நூல் எழுதியிருக்கும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா. பெருமாளிடம் சுசீந்திரம் கோயிலின் இசைத் தூண்களைக் குறித்துக் கேட்டோம்.

kal1_2669108g

சுசீந்திரம் இசைத் தூண்களின் சிறப்பு

நாயக்கர்கள் காலத்துக்குப் பின்பாகத்தான் (1760 1790) இசைத் தூண்கள் காணக் கிடைக்கின்றன. சுசீந்திரம் கோயிலில் குணசேகர மண்டபம் என்று முன்னால் அழைக்கப்பட்டு தற்போது அலங்கார மண்டபம் என்று அழைக்கப்படும் இடத்தில்தான் இசைத் தூண்கள் அமைந்துள்ளன. மண்டபத்தின் வடக்குப் பகுதியில் 2 தொகுதித் தூண்களும் தெற்குப் பகுதியில் 2 தொகுதித் தூண்களும் அமைந்துள்ளன.

வடக்குப் பகுதியிலிருக்கும் தொகுதித் தூணில் 24 சிறிய தூண்கள் இருக்கும். தெற்குப் பகுதியிலிருக்கும் தொகுதியில் 33 சிறிய தூண்கள் இருக்கும். இந்தத் தொகுதித் தூண்கள் அனைத்தும் ஒரேகல்லில் குடையப்பட்டவை என்பது சிறப்பு. அதோடு, இதன் உருவாக்கத்தில் இசைக் கலைஞர்களின் பங்கும் உண்டு. ஏழு ஸ்வரங்களின் அடிப்படையில் இந்த இசைத் தூண்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த இசைத் தூண்களை வாசித்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். சுசீந்திரம் கோயிலில், தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் ஜெயதேவரின் அஷ்டபதியைப் பாடி, இசைத் தூண்களில் வாசித்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றனர்.

தேவசகாயம் பிள்ளை மவுண்ட்டின் வட்டக்கல்

கன்னியாகுமரி திருநெல்வேலிக்கு இடைப்பட்ட ஆரல்வாய்மொழி சிறுகுன்றின்மீது அமைந்திருக்கும் தேவசகாயம் பிள்ளை மவுண்ட்டில் பெரியதொரு வட்டக்கல் உள்ளது. இந்த வட்டக்கல்லில் தட்டினால், மணி அடித்தது போல் ஒலி எழும். தொடக்கத்தில் சுற்றுலாத்தலமாகவே கருதப்பட்ட இந்த இடம், தற்போது தேவசகாயம் பிள்ளையை நினைத்துக்கொண்டு தங்களின் வேண்டுதலைச் சொல்லி இந்தக் கல்லில் ஒலி எழுப்பினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்னும் நம்பிக்கையையும் அளிக்கும் வழிபாட்டு இடமாக மாறியிருக்கின்றது என்றார் அ.கா. பெருமாள்.

Leave a Reply