shadow

vlcsnap-2012-11-10-17h19m40s81

வேதத்தின் விளக்கமாய், நாதவிந்துகலாதியாகத் திகழும் முருகன் யார்? அவனது பிறப்பின் ரகசியம்தான் என்ன? சிவபாலன் என்றும் உமாசுதன் எனவும் போற்றப்படும் கந்தன் உண்மையில் சிவகுமாரனா? பார்வதி பாலனா? இந்தக் கோள்விகளுக்கு எல்லாம் விடை, அறுமுகன் சிவபாலனும் அல்லன், சக்தி மைந்தனும் அல்லன் சிவமும் சக்தியும் இணைந்த சிவசக்தி ரூபனே அவன். முருகன் – சிவபெருமான் மைந்தன் என்று உபசாரமாக சொல்லப்படுவதுதான். ஐம்முகச் சிவனுக்கும் அறுமுகச்சிவனுக்கும் பேதமில்லை என்பது ஆன்றோர் கருத்து.

அசுரர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபிரானை அணுகி அவரைப்போலவே ஒரு மைந்தனை அவரே, அவரிடமிருந்து தோன்றச் செய்து அருளவேண்டும் என்று கோருகின்றனர். வடிவேலன் வரலாற்றைச் சொல்லும் கந்தபுராணத்திலேயே இதற்கான குறிப்பு இருக்கிறது. அசுரனால் அவதி கொண்ட அமரர்கள். அரனை வேண்டி வணங்குவதைச் சொல்வதாக அதில் அமைந்த துதி.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்புமின்றி
வேதமும் கடந்து நின்ற விமலா: ஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க

அரனும் அறுமுகனும் ஒன்றே என்பதற்கு இதுவே வலுவான ஆதாரம்.

பெருமான் முருகன் பிறப்பு, இறப்பு இல்லாதவன் என்பது பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்று விளிக்கிறார் கச்சியப்ப சிவாசாரியார்.

முருகன், ஆறுமுகம் கொண்டதன் உண்மை தாத்பரியம் என்ன? சிவ பெருமானுடைய ஐந்து முகங்களுடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமாயின என்கின்றன புராணங்கள்.

சிவத்துக்குரியவை தற்புருடம் அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் ஈசானம் என்ற முகங்கள் ஐந்துதான் அப்படியானால் ஆறாவது முகம்? அது சிற்சத்தியாகிய சிவசக்தியின் திருமுகம் அதற்கு அதோமுகம் என்று பெயர் ஈசனின் ஐந்தும், அம்பிகையின் ஒன்றுமாக ஐந்துடன் ஒன்றிணைந்து ஆறு திருமுகங்கள் கொண்டு சிவசக்தி சொரூபமாகவே விளங்குகிறான், ஷண்முகன்.

Leave a Reply