shadow

201601250146561641_Murugan-temple-festival-festivity-taippuca_SECVPF

வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தைப்பூச திருவிழா

முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன.

ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 9 மணிக்கு பால், பன்னீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து சுப்பிரமணியருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு வள்ளி-தேவசேனாவுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்து இருந்தனர்.

ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

வேலூர் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பழனியாண்டவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல பாகாயம் அருகே உள்ள பாலமதி கோவில், புதுவசூர் சுப்பிரமணியசாமி கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Leave a Reply