shadow

Raja_Ravi_Varma_-_Mahabharata_-_Birth_of_Shakuntala

தாருகாவனம் என்று ஓர் அற்புதமான, மகா அமைதியான வனம்! அங்குப் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களது சிந்தையில் அணுவளவேனும் பக்தியுணர்வு என்பதே கிடையாது. தங்களது தவத்தின் வலிமையால் முத்தியினை அடைந்து விடலாம் என்ற மகா கர்வத்தில் இருந்தார்கள். அவர்களது பத்தினிமார்களோ அந்த முனிவர்களுக்கும் மேல் இறுமாப்பு படைத்தவர்களாக இருந்தார்கள். தாங்களே அகில உலகிலும் கற்பரசிகள் என்றும் தங்கள் கற்பின் ஆற்றலால் எதையும் சாதித்துவிடும் வல்லமை படைத்தவர்கள் என்பது அவர்கள் எண்ணம். இவர்களின் ஆணவத்தை ஒழிக்கக் கருதிய சிவபெருமான், விஷ்ணுவுடன் கலந்து ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினார். திருமால், பார்த்தவர் மதிமயங்கிக் காலடியில் விழும் அற்புத அழகோடு கூடிய மோகினி வடிவம் தாங்கி வர, சிவன் திகம்பரராய்ப் பிச்சை எடுக்கும் பிட்சாடனர் உருவங்கொண்டு தாருகாவனத்தை அடைந்தனர்.

மோகினியைக் கண்ட முனிவர்கள் தங்கள் தவத்தையும் வேள்வியையும் கைவிட்டு கிரங்கியபடி மோகினியின் பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்! அழகிய பிட்சாடனர் உருவிலிருந்த சிவபெருமானைக் கண்டு முனிவர்களின் மனைவிமார்கள் காதலால் உருக ஆரம்பித்து விட்டார்கள்! தங்கள் கற்புநிலை வழுவி பிட்சாடனரை முனிவர்களது பத்தினிமார்கள் உபசரிக்கத் தலைபட்டனர்! சிவனும் திருமாலும் உள்ளுக்குள் இவர்களைக் கண்டு நகைத்துக் கொண்டார்கள். திடீரென்று அந்த முனிவர்களுக்கு ஒரு பொறி தட்டியது. தங்களது தவத்தையும், மனைவிமார்களது கற்பையும் குலைக்க சிவன் செய்த சதியே இது என்று அவர்கள் ஞானதிருஷ்டியால் கண்டு கொண்டார்கள். எனவே சிவனையும் துணை போன திருமாலையும் ஒருங்கே ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். விஷவிருட்சங்களைச் சமித்து ஆக்கி வேம்பு முதலியவற்றின் நெய்யினால் அபிசார வேள்வியை மகா உக்கிரத்தோடு செய்தார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. சிவனை அழிக்க இதுவே சரியான ஆயுதம் என்று அந்தப் புலியைச் சிவன் மீது ஏவினார்கள். ஆனால் சிவனோ தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த புலியை அலட்சியமாகப்பற்றி முறித்துக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாக உடுத்திக் கொண்டு விட்டார்!

தாங்கள் ஏவிய புலியின் கதியைக் கண்டு, வெகுண்ட முனிவர்கள் அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் தோன்றிய யானை, மான், பூதங்கள், மழு, முயலகன் என்ற அசுரன் ஆகியோரை சிவன் மீது ஏவ, அவர் அவற்றை வெகு சுலபமாக முறியடித்தார். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது! முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான்! தாங்கள் ஏவிய அனைத்தும் பயனற்றுப் போய்விடவே இறுதியாகயாக குண்டத்திலிருந்து எழுந்த கொடிய நாகங்களை சிவன் மீது ஏவினர். அந்த நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள்! அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன! ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி “உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்!

செருக்கு அழிந்த முனிவர்கள் சிவனைப் பணிந்து மன்னித்தருளும்படி வேண்ட, இறைவன் அவர்களை மன்னித்து சிந்தையில் பக்தியுணர்வோடு தவம் புரிந்து முத்தி அடைய வாழ்த்தினார்!

Leave a Reply