சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் 13-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது மகன் ரோகித்(18). கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை பாக்கியலட்சுமி ஒரு மனு கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
என் மகன் ரோகித் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சேர்த்தேன். ஆனால் அவனது மூர்க்கத்தனமான செயல்பாடு காரணமாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். கடந்த 6 மாதங்களாக நான் தான் அவனை பாதுகாத்து வருகிறேன்.

அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், பெண்களை அசிங்கமாக திட்டுவதாக கூறி அவனை அடித்து விடுகின்றனர். தினமும் யாரிடமாவது அடி வாங்கி வீட்டிற்கு வருகிறான். உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. திடீரென வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைக்கிறான். பொருட்களை அள்ளிப்போட்டு தீ வைத்து விடுகிறான்.

எப்போதும் அவனை அருகில் இருந்து கவனிக்க வேண்டியதாக உள்ளது. வெளியே விட்டால் யாரையாவது அடித்து விடுகிறான். அவன்படும் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. என்னாலும் அவனை கவனிக்க முடியவில்லை.

சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறேன். சகோதரி வீட்டில் தான் எனக்கு சாப்பாடு போடுகின்றனர். எனவே எனது மகன் ரோகித்தை கருணை கொலை செய்துவிடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply